1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
  4. DMK's 'advertising model' that beats farmers in the stomach! - TVK Vijay condemns!

விவசாயிகள் வயிற்றில் அடிக்கும் ’விளம்பர மாடல்’ திமுக! - தவெக விஜய் கண்டனம்!

TVK Vijay condemnation

மத்திய அரசின் தேசிய நுகர்வோர் கூட்டுறவு இணையத்திற்கு திமுக அரசு அனுமதி அளித்ததால் தமிழக விவசாயிகள் வயிற்றில் அடித்துள்ளதாக தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் கண்டன அறிக்கை வெளியிட்டுள்ளார்.

 

அந்த அறிக்கையில் அவர் “நலத் திட்டங்களை அள்ளித் தரும் விடியல் அரசு எனத் தமிழ்நாடு முதலமைச்சர் கலந்துகொள்ளும் விழாக்களில் இருண்ட தி.மு.க அரசுக்கு வெற்று விளம்பரம் செய்யப்படுகிறது!

ஆனால் உண்மையில் நடப்பது என்ன?

கருவறை முதல் கல்லறை வரை...' அலட்சியமும் ஊழலும் மலிந்து போன. நிர்வாகத் திறனற்ற விளம்பர மாடல்' ஆட்சியாகத்தான் தி.மு.க. அரசு திகழ்கிறது. அதன் காரணமாகவே ஆண்டு முழுதும், 'நெற்றி வியர்வை நிலத்தில் சிந்த...' அரும்பாடுபட்டு உழைக்கும் விவசாயிகள், ஒவ்வொரு வட்டத்திலும் மாவட்டத்திலும் தொடங்கி, தலைநகர் சென்னை வரையிலும் பல்வேறு பிரச்சினைகளை முன்னிறுத்தித் தமிழக அரசை எதிர்த்துத் தினமும் போராடிக் கொண்டிருக்கின்றனர்.

அதன் ஒரு பகுதிதான். நெல் விவசாயிகள் வயிற்றில் நேரடியாக அடித்து. அவர்களின் வாழ்வைப் பறித்த நெல் கொள்முதல் ஊழலை எதிர்த்து நடைபெறும் போராட்டங்கள்.

அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நெல்லை ஏற்ற இறக்க, எடைபோட்டுக் கட்ட, மூட்டைகளாகப் பிரிக்க என அனைத்து வேலைகளுக்கும் அங்கிருக்கும் ஊழியர்களுக்கு, ஒவ்வொரு கட்டமாக விவசாயிகள் லஞ்சம் கொடுக்க வேண்டியிருக்கிறது. அதையும் கடந்து, வேறு வழியில்லாமல் லஞ்சமும் கொடுத்து, தாங்கள் விற்பனை செய்த நெல்லுக்கு உரிய பணத்தையும் கேட்டு மூன்று மாதங்களாக விவசாயிகள் போராடிக் கொண்டிருக்கின்றனர்.

811 கோடி ரூபாய்க்கு நெல்லைக் கொள்முதல் செய்துவிட்டு, அந்தப் பணத்தைப் பெற்றுத் தராமல் மூன்று மாதங்களுக்கும் மேலாக விவசாயிகளைத் தமிழக அரசு இழுத்தடித்துக் கொண்டிருக்கிறது.

 

எதிர்க் கட்சியாக இருந்த நேரத்தில், தமிழ்நாடு விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவராக உள்ள திரு. பி.ஆர்.பாண்டியன் அவர்கள் நடத்திய போராட்டங்களுக்கு எல்லாம் ஓடிவந்து குரல் கொடுத்த அன்றைய எதிர்க்கட்சித் தலைவர், இன்றைய முதலமைச்சர், இன்று அதே திரு. பி.ஆர்.பாண்டியன் அவர்கள் தலைமையில் விவசாயிகள் ஒன்று திரண்டு தங்களின் நியாயமான கோரிக்கைகளுக்காகக் குரல் கொடுப்பதைத் தடுப்பதோடு, அவர்களின் குரல்வளையை நெரிக்கும் பாதகச் செயலையும் செய்கிறார். ஆனால், 811 கோடி ரூபாய் வரை நெல் கொள்முதலில் ஊழல் நடந்துள்ளது என்றும் அதில் முதலமைச்சருக்குப் பங்கிருக்கிறதா? எனவும் திரு. பி.ஆர்.பாண்டியன் அவர்கள் தலைமையிலான விவசாயிகள் எழுப்பும் கேள்விக்கு, முதலமைச்சரின் பதில் என்ன?

நெல் கொள்முதல் ஊழல் விவகாரத்தில் விவசாயிகளுக்கு ஆதரவாகச் செயல்பட்ட தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக நிர்வாக இயக்குநர் திரு.அ.சண்முகசுந்தரம் அவர்களை அந்தப் பொறுப்பில் இருந்து திடீரெனப் பணியிட மாற்றம் செய்தது ஏன்? எட்டுவழிச் சாலைக்காகப் போராடிய அருளைக் குண்டர் சட்டத்தில் கைது செய்தது முதல், விவசாயிகள் தங்கள் தாய் மடியாகக் கருதும் விவசாய நிலங்களைப் பரந்தூர் விமான நிலையத்திற்காகப் பறித்துக் கொண்டு, அந்த விவசாயிகளை ஓலமிடச் செய்தது வரை, ஆட்சிக்கு வந்த பிறகு விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் விரோத ஆட்சியாகத்தான் தி.மு.க. ஆட்சி நடக்கிறது.

தங்கள் வாழ்வாதாரத்திற்காகவும் நியாயமான கோரிக்கைகளுக்காகவும் போராடும் விவசாயிகளைக் குற்றவாளிகளைப் போல் கைது செய்வது எந்த வகையில் நியாயம்?

வெற்று விளம்பர ஆட்சியைப் போலவே, விவசாயிகளுக்கான தனி நிதிநிலை அறிக்கையும் வெற்றுக் காகித அறிக்கையே தவிர வேறு என்ன?

அடக்குமுறையைக் காட்டி விவசாயிகளை ஒடுக்க நினைத்தால், டெல்லியில் ஒன்றிய அரசுக்கு எதிராக அகில இந்திய விவசாயிகள் எப்படி வீரம் செறிந்த போராட்டத்தை முன்னெடுத்து ஸ்தம்பிக்க வைத்தார்களோ... அதே நிலை தமிழகத்திலும் நடைபெறும்.

அதற்கான முன்னோட்டம்தான், நெல் கொள்முதல் ஊழலை எதிர்த்து இன்றைக்கு நடைபெறும் போராட்டங்கள்.

உடனடியாகத் தமிழ்நாடு அரசு விவசாய விரோத நடவடிக்கைகளைக் கைவிட்டு, நெல் விவசாயிகளுக்கு உரிய தொகையைப் பெற்றுத் தர வேண்டும்: இனி வரும் காலங்களில் முன்பிருந்ததைப் போல், தமிழக அரசே நேரடியாக நெல்லைக் கொள்முதல் செய்ய வேண்டும்: அதில் லஞ்சம் - ஊழல் உள்ளிட்ட நிர்வாகச் சீர்கேடுகள் நடைபெறாமல் உடனடியாகத் தடுக்க வேண்டும். இல்லையென்றால், வரும் சட்டமன்றத் தேர்தலில் தமிழக விவசாயப் பெருங்குடி மக்கள் இந்த வெற்று விளம்பர மாடல் அரசுக்குத் தகுந்த பாடம் புகட்டுவார்கள் என்று தமிழக வெற்றிக் கழகத் தலைவர் அவர்களின் ஒப்புதலின் பேரில் தெரிவித்துக்கொள்கிறேன்.

 

என்று தெரிவித்துள்ளார்.

 

Edit by Prasanth.K

About Writer
Prasanth K
அடுத்த கட்டுரையில்
ஆகாஷ் பாஸ்கரன் மீது நடவடிக்கை எடுக்க கூடாது: அமலாக்கத்துறைக்கு நீதிமன்றம் உத்தரவு..!