டெல்லி - நொய்டா விமான நிலையத்தின் பயண நேரம் வெறும் 21 நிமிடங்கள்.. வருகிறது அதிவேக விரைவு ரயில்..
டெல்லிக்கும் உத்தர பிரதேசத்தில் புதிதாக அமையவிருக்கும் நொய்டா சர்வதேச விமான நிலையத்திற்கும் இடையேயான பயண நேரத்தை வெறும் 21 நிமிடங்களாக குறைக்கும் அதிவேக பிராந்திய விரைவு ரயில் போக்குவரத்து திட்டத்திற்கு உத்தர பிரதேச அரசு அதிகாரப்பூர்வ ஒப்புதல் அளித்துள்ளது. இத்திட்டத்திற்கான விரிவான திட்ட அறிக்கை மத்திய நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகத்தின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக உ.பி. தொழில்துறை அமைச்சர் நந்த் கோபால் குப்தா தெரிவித்துள்ளார்.
டெல்லி-வாரணாசி அதிவேக ரயில் பாதையையும் இந்த விமான நிலைய முனையத்துடன் இணைக்கும் வகையில் இத்திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஜெவார் விமான நிலைய பகுதி ஒரு மாபெரும் சரக்கு போக்குவரத்து மற்றும் தொழில்துறை மையமாக உருவெடுக்கும்.
மேலும், யமுனா எக்ஸ்பிரஸ்வே பகுதியானது ஆக்ரா-லக்னோ, டெல்லி-மும்பை உள்ளிட்ட முக்கிய விரைவு சாலைகளுடன் இணைக்கப்பட்டு வருவதால், இது மிக முக்கியமான போக்குவரத்து மண்டலமாக மாறவுள்ளது. இப்பகுதியில் செமிகண்டக்டர் சிப் தயாரிப்பு ஆலை, மருத்துவ உபகரண பூங்கா, தரவு பூங்கா மற்றும் பொம்மை பூங்கா போன்ற பல நவீன தொழில் திட்டங்களும் அதிவேகமாக மேம்படுத்தப்பட்டு வருகின்றன.
இந்த அதிவேக ரயில் இணைப்பு, தலைநகர் டெல்லி மற்றும் நொய்டா இடையேயான வணிக தொடர்பை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Edited by Siva
