1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By வீரமணி பன்னீர்செல்வம்
Last Modified: சனி, 30 மே 2015 (12:41 IST)

சென்னை ஐ.ஐ.டி. மாணவர்களுக்கு ஆதரவாக டெல்லி மாணவர்கள் போராட்டம்!

மோடி அரசை விமர்சித்தார்கள் என்று கூறி சென்னை ஐ.ஐ.டி. மாணவர்களின் அமைப்பிற்கு தடை விதிக்கப்பட்டதைக் கண்டித்து டெல்லியில் மாணவர்கள் மத்திய அமைச்சர் ஸ்மிரிதி இரானி வீட்டு முன்பு போராட்டம் நடத்தினர்.
 

 
அம்பேத்கர் பெரியார் ஸ்டடி சென்டர் (APSC) என்ற அமைப்பினை சென்னை ஐ.ஐ.டி. மாணவர்கள்  நடத்தி வருகின்றனர். இந்த அமைப்பு மீது சிலர் புகார் தெரிவித்தனர்.
 
அதில், " APSC இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் மத்திய அரசின் கொள்கைகளை அவதூறாக விமர்சித்தும், பிரதமர் மோடி மற்றும் இந்து மதத்தினருக்கு எதிராக வெறுப்புப் பிரச்சாரம் செய்கின்றனர். அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என தெரிவிக்கப்பட்டிருந்தது.
 
இந்நிலையில் கடந்த 15 ஆம் தேதியன்று மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை இணைச் செயலர் பிரிஸ்கா மேத்யூவிடம் இருந்து சென்னை ஐ.ஐ.டி. தலைமைக்கு இவ்விவகாரம் தொடர்பாக விளக்கம் கோரி கடிதம் அனுப்பப்பட்டது. இதனையடுத்து புகார் கடிதத்தையும், மத்திய அரசு விளக்கம் கோரி அனுப்பிய கடிதத்தையும் சுட்டிக்காட்டி சென்னை ஐ.ஐ.டி. தலைவர், APSC அமைப்புக்கு தடை விதித்துள்ளார்.
 
இந்தத் தடை இந்திய அளவில் சமூக வலைத்தளங்களில் கடுமையான விமர்சனங்களை எழுப்பியுள்ளது.மாணவர்கள் தான் எதிர்கால இந்தியா என்று கூறப்படும் நிலையில் மாணவர்கள் மீதான கருத்துச் சுதந்திரத்திற்கு பாதிப்பு உண்டாக்கும் வகையில் சென்னை ஐ.ஐ.டி. நடந்து கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.
 
இதனையடுத்து டெல்லியில் காங்கிரஸ் கட்சியின் மாணவர் அமைப்பினர்,  சென்னை மாணவர்களுக்கு  ஆதரவு தெரிவித்து மத்திய அமைச்சர் ஸ்மிரிதி இரானி வீட்டின் முன்பு போராட்டம் நடத்தினர். அப்போது மத்திய அரசைக் கண்டித்து முழக்கங்களை எழுப்பினர்.