வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By வீரமணி பன்னீர்செல்வம்
Last Modified: புதன், 8 ஜூலை 2015 (21:32 IST)

வேகமாக வந்த ஹேமமாலினியின் கார் தான் விபத்துக்கு காரணம்: இறந்த சிறுமியின் தந்தை குற்றச்சாட்டு

ஹேமமாலினியின் கார் வேகமாக வந்திருக்காவிட்டால் விபத்து தவிர்க்கப்பட்டிருக்கும் என்று உயிரிழந்த சிறுமியின் தந்தை குற்றம்சாட்டியுள்ளார்.
 

 
இந்தி நடிகையும், பாஜக எம்.பி.யுமான ஹேமமாலினி, தனது உதவியாளருடன் கடந்த 2 ஆம் தேதி ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் நோக்கி காரில் சென்று கொண்டிருந்தார். காரை அவரது டிரைவர் ஓட்டினார்.  இந்த கார் லால்சோட் பைபாஸ் சாலையில் தவுசா அருகே சென்று கொண்டிருந்த போது, எதிரே வந்த கார் ஒன்றுடன் பயங்கரமாக மோதியது. இதில் எதிரே வந்த காரில் இருந்த சோனம் என்ற 4 வயது சிறுமி பரிதாபமாக உயிரிழந்தார்.
 
மேலும் சிறுமியின் தந்தை, தாய், சகோதரர் மற்றும் உறவினர் ஒருவர் ஆகியோருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. அவர்கள் ஜெய்ப்பூரில் உள்ள எஸ்.எம்.எஸ். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்தில் ஹேமமாலினிக்கும் மூக்கு, நெற்றி உள்ளிட்ட பகுதிகளில் காயம் ஏற்பட்டது. அவர் ஜெய்ப்பூரில் உள்ள போர்ட்டிஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை முடிந்து கடந்த 4 ஆம் தேதி வீடு திரும்பினார்.
 
இந்த நிலையில் இந்த கார் விபத்துக்கு சிறுமி சோனத்தின் தந்தையே காரணம் என நடிகை ஹேமமாலினி கூறியுள்ளார். இது குறித்து தனது டுவிட்டர் வலைத்தளத்தில் அவர் கூறுகையில், ராஜஸ்தானில் நடந்த விபத்தில் தேவையில்லாமல் ஒரு சிறுமி உயிரிழந்தது மற்றும் அவரது குடும்பத்தினர் படுகாயம் அடைந்ததற்காக எனது இதயம் வருந்துகிறது. அந்த சிறுமியின் தந்தை போக்குவரத்து விதிகளை கடைப்பிடித்திருந்தால், இந்த விபத்தை தவிர்த்திருக்க முடியும் என்று தெரிவித்திருந்தார்.
 
ஹேமமாலினி குற்றச்சாட்டுக்கு பதில் அளித்து உள்ள சிறுமியின் தந்தை, ஹேமமாலினியின் கார் வேகமாக வந்திருக்காவிட்டால் விபத்து தவிர்க்கப்பட்டு இருக்கும் என்று கூறியுள்ளார். விபத்தில் பாதிக்கப்பட்டவர்களின் உடல்நிலையை கேட்டு அறிவதற்கு பதிலாக குற்றம்சாட்டி வருகிறார் என்றும் சாடியுள்ளார்.
 
விபத்து நடந்தவுடன் நடிகை ஹேமமாலினியுடன் சேர்த்து சோனத்தையும் உடனே மருத்துவமனைக்கு எடுத்து சென்றிருந்தால், அவளை காப்பாற்றியிருக்கலாம் என சிறுமியின் தந்தை ஏற்கனவே கூறியிருந்தார். இந்த புகாரை தானாக முன்வந்து வழக்காக எடுத்துக்கொண்ட மாநில மனித உரிமை ஆணையம், இது குறித்து அறிக்கை அளிக்குமாறு டவுசா மாவட்ட எஸ்.பி. நோட்டீஸ் அனுப்பியுள்ளது.