1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By K.N.Vadivel
Last Modified: புதன், 20 ஜனவரி 2016 (21:53 IST)

தலித் மாணவர் தற்கொலை: பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா கடும் கண்டனம்

ஹைதராபாத் மத்திய பல்கலைக்கழக ஆராய்ச்சி மாணவர் ரோஹித் வெமுலா தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நாட்டிற்கு பெரும் அவமானம் என பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா கருத்து தெரிவித்துள்ளது.
 

 
இது குறித்து, பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா தமிழக  தலைவர் மு.முஹம்மது இஸ்மாயில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-
 
ஹைதராபாத் மத்திய பல்கலைக்கழக ஆராய்ச்சி மாணவர் ரோஹித் வெமுலா தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பல்கலைக்கழக வளாகங்களில் தலித் மாணவர்கள் மீது மேற்கொள்ளப்படும் பாரபட்சத்தை ரோஹித்தின் மரணம் மீண்டுமொருமுறை வெளிச்சம் போட்டு காட்டுகிறது.
 
முஸஃபர்நகர் கலவரத்தை குறித்த 'முஸஃபர்நகர் பாகி ஹை' ஆவணப்படம் டெல்லி பல்கலைக்கழகத்தில் கடந்த அக்டோபர் மாதம்  திரையிடப்பட்ட போது ஏபிவிபி அமைப்பினர் அங்கு தாக்குதலில் ஈடுபட்டனர்.
 
இதனை கண்டித்து ஹைதராபாத் மத்திய பல்கலைக்கழக அம்பேத்கர் மாணவர் அமைப்பினர் போராட்டம் நடத்தினர். அதன் பின்னர் யாகூப் மேமன் தூக்கிலிப்பட்டதை அம்பேத்கர் மாணவர் அமைப்பினர் கண்டித்த போதும் இரு தரப்பிரனருக்கும் இடையே பிரச்சனை எழுந்துள்ளது. அத்துடன் அம்பேத்கர் மாணவர் அமைப்பினர் குறித்து ஏபிவிபி நிர்வாகிகள் ஃபேஸ்புக் பக்கத்தில் தரக்குறைவான பதிவுகளையும் செய்துள்ளனர்.
 
மாணவர்கள் மத்தியிலுள்ள பிரச்சனைகளை ஏபிவிபி அமைப்பினர் மத்திய இணை அமைச்சர் பண்டாரு தத்தாத்ரேயாயிடம் கொண்டு செல்ல அவர் மனித வள மேம்பாடு துறைக்கு கடிதம் அனுப்பியுள்ளார். இதனை தொடர்ந்து பல்கலைக்கழகம் அம்பேத்கர் மாணவர் அமைப்பை சேர்ந்த ரோஹித் உள்ளிட்ட ஐந்து மாணவர்களை இடைநீக்கம் செய்ததுடன் விடுதியில் இருந்தும் அவர்களை நீக்கியது.
 
பல்கலைக்கழகத்தின் இந்த அராஜக போக்கை கண்டித்து தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வந்த ரோஹித் ஜனவரி 18 அன்று தற்கொலை செய்து கொண்டார். தான் தலித் சமூகத்தில் பிறந்ததன் காரணமாகத்தான் இத்தகைய நெருக்கடிகளை சந்திப்பதாக ரோஹித் தனது கடிதத்தில் குறிப்பிட்டிருப்பது இந்நாட்டில் சாதிய அடக்குமுறைகள் எந்தளவிற்கு உள்ளன என்பதையும் காட்டுகிறது.
 
கடந்த ஜூலை மாதம் இருந்தே ரோஹித்திற்கு வழங்க வேண்டிய கல்வி உதவித் தொகையை பல்கலைக்கழக நிர்வாகம் வழங்கவில்லை என்றும் கூறப்படுகிறது. ரோஹித்தின் மரணம் ஒற்றை நிகழ்வல்ல. இதே ஹைதராபாத் மத்திய பல்கலைக்கழகத்தில் பிப்ரவரி 24, 2008 அன்று ஆராய்ச்சி மாணவர் செந்தில் குமார் தற்கொலை செய்து கொண்டார்.
 
தலித் மாணவர்களுக்கு போதிய வழிகாட்டுதல்கள் வழங்கப்படவில்லை என்பதையும் அவர்களுக்கான ஆலோசகர்கள் (சூப்பர்வைசர்கள்) நியமிக்கப்படவில்லை என்பதையும் தலித் மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்கப்படவில்லை என்பதையும் பேராசிரியர் வினோத் பாவராலா தலைமையிலான குழு அப்போது கண்டறிந்து கூறியது.
 
ரோஹித் போன்ற சமூக ஆர்வலர்களின் போராட்டங்களை தேச விரோத செயல்களாக சித்தரிக்கும் சங்பரிவார்களின் போக்கும் வன்மையாக கண்டிக்கத்தக்கது. இத்தகு மனநிலை கொண்ட பாரதிய ஜனதா மற்றும் சங்பரிவார அமைப்புகளை வரும் சட்டமன்ற தேர்தலில் தமிழ் சமூகம் முற்றிலுமாக புறக்கணிக்க வேண்டும்.
 
பல்கலைக்கழகம் மற்றும் கல்லூரி வளாகங்களில் தலித் மாணவர்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் இத்தகைய பாரபட்சமான போக்குகள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும். அத்துடன் ரோஹித்தின் தற்கொலைக்கு காரணமான மத்திய இணை அமைச்சர் பண்டாரு தத்தாத்ரேயா, துணை வேந்தர் அப்பா ராவ் ஆகியோர் மீது தகுந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு அவர்களுக்கு உரிய தண்டனை வழங்க வேண்டும் என்று பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா கோரிக்கை விடுத்துள்ளது.