வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. தேசியச் செய்திகள்
Written By வீரமணி பன்னீர்செல்வம்
Last Modified: செவ்வாய், 20 மே 2014 (11:46 IST)

பீகார் புதிய முதலமைச்சராக ஜிதன்ராம் மஞ்சி தேர்வு - நிதிஷ்குமார் தேர்ந்தெடுத்தார்

பீகார் மாநிலத்தின் புதிய முதலமைச்சராக ஜிதன்ராம் மஞ்சி தேர்ந்தெடுக்கப்பட்டார். பதவி விலகிய நிதிஷ்குமார் அவரை தேர்வு செய்தார்.
 
நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் பீகார் மாநிலத்தில் ஐக்கிய ஜனதா தளம் கட்சி படுதோல்வியை சந்தித்தது. இந்த தோல்விக்கு பொறுப்பேற்று பதவி விலகுவதாக மாநில முதலமைச்சரும், கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவருமான நிதிஷ்குமார் அறிவித்தார். இதைத் தொடர்ந்து மாநில கவர்னர் டி.ஒய்.படேலிடமும் தனது ராஜினாமா கடிதத்தையும் அவர் கொடுத்தார்.
 
தனது ராஜினாமா முடிவை நிதிஷ்குமார் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என அவரது கட்சி எம்.எல்.ஏ.க்கள் வலியுறுத்தினர். மேலும், கட்சி எம்.எல்.ஏ.க்கள் நேற்று முன்தினம் ஒன்று கூடி மீண்டும் நிதிஷ்குமாரையே முதலமைச்சராக தேர்ந்தெடுத்தனர். இதனால் தர்ம சங்கடமான நிலைக்கு தள்ளப்பட்ட நிதிஷ்குமார் தனது முடிவை நேற்று(திங்கட்கிழமை) தெரிவிப்பதாக கூறியிருந்தார்.
 
இந்த பரபரப்பான சூழ்நிலையில் பாட்னாவில் உள்ள ஐக்கிய ஜனதா தள கட்சி அலுவலகத்தில் நேற்று காலை எம்.எல்.ஏ.க்கள் கூடினார்கள். இந்த கூட்டத்திலும் தனது முடிவை நிதிஷ்குமார் மாற்றிக்கொள்ளவில்லை. தொடர்ந்து, தனது முடிவில் அவர் உறுதியாக இருந்தார். இதனால், வேறு வழியின்றி எம்.எல்.ஏ.க்கள் ஒரு புதிய முடிவை எடுத்தனர். அதன்படி புதிய முதலமைச்சரை தேர்வு செய்யும் பொறுப்பை நிதிஷ்குமாரிடமே ஒப்படைப்பது என்று அவர்கள் ஒருமனதாக தீர்மானித்தனர்.
 
கட்சி எம்.எல்.ஏ.க்கள் கொண்டு வந்த தீர்மானத்தை நிறைவேற்றும் விதமாக நிதிஷ்குமார் நேற்று மாலை பீகாரின் புதிய முதலமைச்சராக 68 வயது ஜிதன்ராம் மஞ்சியை தேர்வு செய்தார். தலித் தலைவரான ஜிதன்ராம் மஞ்சி, பதவி விலகிய நிதிஷ்குமாரின் அமைச்சரவையில் தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் நல அமைச்சராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. பின்னர் கவர்னரையும் நிதிஷ்குமார் சந்தித்து பேசினார்.
 
அதன்பிறகு அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், “மஞ்சி ஆட்சி அமைக்க உரிமை கோரும் வகையில், 120 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு பட்டியலை கவர்னரிடம் ஒப்படைத்துள்ளோம்” என்று தெரிவித்தார். முதலமைச்சர் பதவிக்கு மஞ்சியின் பெயரை பரிந்துரைத்ததில் ஐக்கிய ஜனதா தலைவர் சரத் யாதவ், கட்சியின் மாநில தலைவர் பஷிஸ்தா நாராயணன் சிங் ஆகியோரிடம் ஒப்புதல் பெறப்பட்டிருப்பதாகவும் அவர் கூறினார்.
 
முன்னதாக நேற்று பாட்னாவில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ஐக்கிய ஜனதா தள தலைவர் சரத்யாதவ் கூறுகையில், “பீகாரில் புதிய அரசை அமைப்பதற்கு லாலு பிரசாத்தின் ராஷ்டிரீய ஜனதா தளத்தின் ஆதரவு எங்களுக்கு தேவை இல்லை. அவருடைய ஆதரவை பெறுவோம் என்ற கேள்விக்கே இடமில்லை” என்று தெரிவித்தார்.
 
243 உறுப்பினர்களைக் கொண்ட பீகார் சட்டசபையில், தற்போதை பலம் 239 தான். எனவே ஆட்சி அமைக்க 120 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவே போதுமானது என்பது குறிப்பிடத்தக்கது.