முதல்வர் விஜய் பெயரில் அறக்கட்டளை என வட இந்தியாவில் ஒரு மோசடி கும்பல்.. சைபர் க்ரைம் போலீஸ் தகவல்..
இந்தூரில் சைபர் மோசடியில் ஈடுபடும் கும்பல், தமிழக முதல்வர் விஜய்யின் பெயரை பயன்படுத்தி பொதுமக்களை ஏமாற்றி வருவதாக போலீசார் எச்சரித்துள்ளனர். முதல்வருடன் தொடர்புடைய அறக்கட்டளை ஒன்றின் பிரதிநிதிகள் என்று கூறிக்கொள்ளும் மோசடி நபர்கள், ஏழைகள் மற்றும் தொழில் தொடங்க விரும்புவோருக்கு உதவி வழங்குவதாக ஆசை காட்டி பணம் பறிப்பதாக புகார் எழுந்துள்ளது.
கடந்த சில வாரங்களில் இந்தூர் குற்றப்பிரிவு மற்றும் சைபர் பிரிவுக்கு இதுபோன்ற சுமார் ஆறு புகார்கள் வந்துள்ளன. தொலைபேசி அழைப்புகள் மற்றும் குறுஞ்செய்திகள் மூலம் தொடர்புகொள்ளும் மோசடி நபர்கள், தொழில் கடன், கல்விக் கடன், ஸ்டார்ட்அப் நிதியுதவி, அரசு மானியம், வெளிநாட்டில் படிப்பதற்கான நிதியுதவி உள்ளிட்ட பல்வேறு சலுகைகளை வழங்குவதாக கூறுகின்றனர்.
வலையில் சிக்கும் நபர்களுக்கு பதிவு செய்வதற்கான போலி இணையதள இணைப்பை அனுப்பி, ஜிஎஸ்டி கட்டணம், சரிபார்ப்பு கட்டணம், பதிவு மற்றும் செயலாக்கக் கட்டணம் என பல்வேறு காரணங்களை கூறி பணம் செலுத்த வைக்கின்றனர். சிலரிடம் ஆயிரக்கணக்கிலும், சில வழக்குகளில் ரூ.50 ஆயிரம் வரையிலும் பணம் வசூலிக்கப்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
பிரபலமான நபரின் பெயரை பயன்படுத்தி மக்களின் நம்பிக்கையை பெற முயற்சி நடப்பதாக அதிகாரிகள் கூறியுள்ளனர். மோசடி தொடர்பான செல்போன் எண்கள், வங்கி பரிவர்த்தனைகள் மற்றும் டிஜிட்டல் ஆதாரங்கள் ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன. இந்த புகார்கள் பெரிய மாநிலங்களுக்கு இடையிலான சைபர் மோசடி கும்பலுடன் தொடர்புடையதா என்றும் விசாரணை நடைபெறுகிறது.
Edited by Siva
