1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By வீரமணி பன்னீர்செல்வம்
Last Modified: புதன், 5 ஆகஸ்ட் 2015 (18:58 IST)

எம்.பி.க்கள் இடைநீக்கம்: சோனியா தலைமையில் 2வது நாளாக காங்கிரஸ் போராட்டம்

மக்களவையிலிருந்து 25 காங்கிரஸ் எம்.பி.க்கள் இடைநீக்கம் செய்யப்பட்டதைக் கண்டித்து நாடாளுமன்ற வளாகத்தில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தலைமையில் அக்கட்சி எம்.பி.க்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து இரண்டாவது நாளாக இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.
 

 
காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு தெரிவித்து மேலும் 6 கட்சியினர் இப்போராட்டத்தில் கலந்து கொண்டனர்.
 
போராட்டம் குறித்து சோனியா காந்தி செய்தியாளர்களிடம் கூறும்போது, "நாடாளுமன்ற முடக்கத்துக்கு தீர்வு காண அரசு எவ்வித முயற்சியும் எடுப்பதாக தெரியவில்லை. எனவே, எங்களது போராட்டம் நாளையும் தொடரும்" என்றார்.
 
தொடர்ந்து பேசிய ராகுல் காந்தி, "சபாநாயகர் பதவிக்கு நாங்கள் மரியாதை அளிக்கிறோம். ஆனால் அவரது முடிவுக்கு நாங்கள் உடன்படவில்லை" என்றார்.
 
முன்னதாக, நாடாளுமன்ற வளாகத்தில் வெங்கய்யா நாயுடு பேசும்போது, "சுஷ்மா சுவராஜ் மத்திய அரசின் சொத்து. சிவ்ராஜ் சவுகான், வசுந்தரா ராஜேவும் நல்லாட்சி செலுத்தி வருகின்றனர். நாடாளுமன்ற முடக்கத்துக்கு தீர்வு காண அரசு தயாராகவே இருக்கிறது. ஆனால் அதற்காக அர்த்தமற்ற கோரிக்கைகளுக்கு அரசு செவி சாய்க்க முடியாது" என்றார்.
 
மக்களவை நடவடிக்கைகளுக்கு குந்தகம் ஏற்படுத்தியதாகக் கூறி, மொத்தம் உள்ள 44 காங்கிரஸ் எம்பிக்களில் 25 பேரை 5 நாட்களுக்கு இடைநீக்கம் செய்து மக்களவைத் தலைவர் சுமித்ரா மகாஜன் திங்கள்கிழமையன்று உத்தரவிட்டார்.