வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Updated : புதன், 22 ஏப்ரல் 2015 (18:31 IST)

பாஜகவை காங்கிரஸ் விமர்சிப்பது ’சாத்தான் வேதம் ஓதுவதைப் போன்றது’ - வெங்கையா நாயுடு

நிலம் கையகப்படுத்துதல் தொடர்பான அவசர சட்டத்தை காங்கிரஸ் விமர்சிப்பது, சாத்தான் வேதம் ஓதுவதைப் போல உள்ளது, என வெங்கையா நாயுடு கூறியுள்ளார்.
 
நேற்று டெல்லியில் பாஜக நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு பேசிய நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் வெங்கையா நாயுடு, ”காங்கிரஸ் கட்சி, 50 ஆண்டுகள் ஆட்சியில் இருந்துள்ளது. அவர்களின் ஆட்சிக் காலத்தில் 456 அவசர சட்டங்கள் அமல்படுத்தப்பட்டு உள்ளன.
 
இந்நிலையில், நிலம் கையகப்படுத்துதல் மசோதாவை பாஜக அவசர சட்டமாக அமல்படுத்தியதை, காங்கிரஸ் கட்சியினர் விமர்சிப்பது சாத்தான் வேதம் ஓதுவதைப் போல உள்ளது. ஜவஹர்லால் நேரு பிரதமராக இருந்த காலத்தில் 77 அவசர சட்டங்களும், இந்திரா ஆட்சியில் இருந்தபோது இரண்டு மாதத்திற்கு ஒருமுறை மூன்று அவசர சட்டங்கள் என 77 அவசர சட்டங்களும், ராஜிவ் பதவிக் காலத்தில், 35 அவசர சட்டங்களும் அமல்படுத்தப்பட்டு உள்ளன.
 
மேலும், கம்யூனிஸ்டுகளின் ஆதரவுடன் பதவி வகித்த ஐக்கிய ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில், மாதத்திற்கு மூன்று அவசர சட்டங்கள் என்ற ரீதியில் 77 அவசர சட்டங்கள் அமலாகி உள்ளன. ஆனால், ஐக்கிய முன்னணி ஆட்சியில் 61 மசோதாக்கள் தான் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு உள்ளன. அவற்றை விட அவசர சட்டங்களின் எண்ணிக்கை அதிகம்.
 
பொய்யை திரும்ப, திரும்ப, 10 முறை சொன்னால் அது உண்மையாகி விடாது. அவசர சட்டம் அமல்படுத்தியது ஜனநாயக படுகொலை என விமர்சிக்கும் காங்கிரஸ் கட்சியினர் தான், நாட்டில் அவசரநிலை பிரகடனத்தை அமல்படுத்தி லட்சக்கணக்கானவர்களை சிறையில் அடைத்தனர்.
 
நில கொள்கையை ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பித்தது முந்தைய காங்கிரஸ் அரசு தான். இந்த உண்மைகள் எல்லாம் மக்களுக்கு தெரிய வந்தால் நிலம் கையகப்படுத்துதல் மசோதா விவாதத்திற்கு வரும் முன் காங்கிரசாரின் சுயரூபம் வெட்ட வெளிச்சமாகி விடும்” என்று கூறியுள்ளார்.