1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Suresh
Last Updated : வியாழன், 2 அக்டோபர் 2014 (10:29 IST)

‘தூய்மை இந்தியா‘ திட்டத்தைத் தொடங்கி வைத்தார் நரேந்திர மோடி

‘தூய்மை இந்தியா‘ என்னும் திட்டத்தை மகாத்மா காந்தி பிறந்த நாளான இன்று பிரதமர் நரேந்திர மோடி டெல்லியில் தொடங்கி வைத்தார்.
 
டெல்லி வால்மீகி பஸ்தியில் பிரதமர் மோடி இந்தத் ‘தூய்மை இந்தியா‘ திட்டத்தைத் தொடங்கி வைத்தார். காந்தி தங்கிருந்த இல்லத்திற்கு வெளியே சாலையை சுத்தப்படுத்தி திட்டம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.

இது குறித்து நரேந்திர மோடி பேசுகையில், “தூய்மையான இந்தியா என்ற காந்திஜியின் கனவு இதுவரை நிறைவேறவில்லை. தற்போதைய தூய்மை இந்தியா திட்டத்தை காந்திஜி பார்த்துக்கொண்டிருக்கிறார்.
 
இந்தியாவை தூய்மையாக்க முயற்சி செய்யும் அனைவருக்கும் நன்றி. இந்த திட்டத்தால் மத்திய அரசு ஆதாயம் அடைய முயற்சி செய்யவில்லை.
 
குப்பைகளை பார்க்கும்போது அதைபடம் பிடித்து பதிவேற்றம் செய்யுங்கள். அதைபோல் தூய்மை படுத்திய பிறகு அந்த இடத்தை படம் பிடித்து பதிவேற்றம் செய்யுங்கள்.
 
ஒவ்வொருவரும் வாரத்திற்கு இரண்டு முறை இந்தியாவை தூய்மை படுத்த முயற்சி செய்யுங்கள். ஒவ்வொரு அரசும் இந்த இயக்கத்தை செயல்படுத்த வேண்டும். செவ்வாயை தொட்ட நாம் ஏன் இந்தியாவையும் தூய்மை படுத்த முடியாது?“ இவ்வாறு அவர் பேசினார்.
 
நரேந்திர மோடி துடைப்பத்தை எடுத்து சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டார். மற்ற அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் சுத்தப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.
 
‘தூய்மை இந்தியா‘ திட்டத்தில் நாடு முழுவதும் உள்ள 31 லட்சம் மத்திய அரசு ஊழியர்கள் பங்கேற்றனர். அரசு ஊழியர்கள் அனைவரும் தூய்மையைப் பேணுவதற்கான உறுதி மொழியை ஏற்றனர். விழிப்புணர்வை ஏற்படுத்தும் நிகழ்ச்சிகளோடு, தூய்மைப் பணிகளும் மேற்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
 
வீடுகள், பணி இடங்கள், சாலைகள், பஸ் நிலையங்கள், ரயில் நிலையங்கள் மற்றும் நீர் நிலையங்கள் என அனைத்து இடங்களையும் சுத்தப்படுத்துவதன் மூலம் திட்டத்தை வெற்றி பெற செய்ய முடியும் என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.
 
முன்னதாக, டெல்லியில் உள்ள ராஜ்காட் சென்ற நரேந்திரமோடி, காந்தியின் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார். அப்போது மகாத்மா காந்தி கண்ட கனவான தூய்மையான இந்தியாவை உருவாக்க இந்திய மக்கள் உதவி செய்ய வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி கேட்டுக் கொண்டார்.
 
தூய்மையான இந்தியாவை உருவாக்குவது பிரதமர் நரேந்திர மோடியின் லட்சியக் கனவாக இருந்ததாகக் கூறப்படுகிறது.
 
இந்தியா தூயமையான நாடாக இருந்தால் உலக அளவில் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் நாடுகளின் வரிசையில் முதல் 50 இடங்களைப் பிடித்துவிட முடியும் என்றும் இதனால் இந்தியாவை எடுத்துக்காட்டாக கூறும் நாடாகவும் மாற்ற முடியும் என்று கருதுகிறார்.
 
சுத்தம், சுகாதாரம் போன்றவற்றுக்கு முன்னுரிமை அளிப்பதன் மூலம் சுற்றுலாவை மேம்படுத்துவதுடன் பொருளாதாரத்தையும் வளர்ச்சி பெறச் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக ‘தூய்மை இந்தியா‘ என்னும் திட்டத்தை தொடங்க அவர் முடிவு செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.