வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. தேசியச் செய்திகள்
Written By Veeramani
Last Updated : செவ்வாய், 13 மே 2014 (10:19 IST)

மேற்கு வங்கத்தில் வாக்குச்சாவடி அருகே திரிணாமூல் காங்கிரஸ் -மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தொண்டர்கள் மோதல்

மேற்கு வங்க மாநிலத்தில் வாக்குச்சாவடி அருகே திரிணாமூல் காங்கிரஸ் - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தொண்டர்கள் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் 16 பேர் காயம் அடைந்தனர்.
நாடாளுமன்றத்துக்கு இறுதிக்கட்டமாக நேற்று 41 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற்றது. மம்தா பானர்ஜியின் திரிணாமூல் காங்கிரஸ் ஆட்சி நடைபெறும் மேற்கு வங்க மாநிலத்தில் 17 தொகுதிகளில் நேற்று வாக்குப்பதிவு நடந்தது.
 
இந்த தொகுதிகளில் 188 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். நேற்று அங்கு தேர்தலை சந்தித்தவர்களில் முன்னாள் ரயில்வே அமைச்சர் தினேஷ் திரிவேதி, மாநில காங்கிரஸ் தலைவர் அதிர் ரஞ்சன் சவுத்ரி, மாநில பாரதீய ஜனதா தலைவர் ராகுல் சின்கா, முன்னாள் மத்திய அமைச்சர்கள் சவுகதா ராய், சுதீப் பந்தோபாத்யாயா, நடிகர்கள் தேவ், தபஸ் பால், பிரபல மேஜிக் நிபுணர் பி.சி.சர்க்கார் ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள் ஆவார்கள்.

காலையிலிருந்தே வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்றது. வாக்குச்சாவடிகளில் ஏராளமான ஆண்களும், பெண்களும் வரிசையில் நின்று ஆர்வத்துடன் வாக்களித்தனர். மேற்கு வங்க மாநில கவர்னர் எம்.கே.நாராயணன் தனது மனைவியுடன் கொல்கத்தாவில் உள்ள டேவிட் ஹரே பள்ளியில் அமைக்கப்பட்டு இருந்த வாக்குச்சாவடிக்கு சென்று ஓட்டுப்போட்டார்.
 
வாக்குப்பதிவையொட்டி அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க 17 தொகுதிகளிலும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. ஓட்டுச்சாவடிகளில் போலீசார் நிறுத்தப்பட்டு இருந்தனர்.
 
என்றாலும் ஒரு சில வன்முறை சம்பவங்கள் நடைபெற்றன. தெற்கு 24 பர்கானா மாவட்டத்தில் உள்ள பிரம்மன் சாக் என்ற இடத்தில், ஓட்டுப்பதிவு தொடங்குவதற்கு முன்பு இரு வாக்குச்சாவடிகள் அருகே திரிணாமூல் காங்கிரஸ் - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தொண்டர்களுக்கு இடையே திடீரென்று மோதல் ஏற்பட்டது. ஒருவர் மீது ஒருவர் தடிகளால் தாக்கிக்கொண்டதோடு, சரமாரியாக கற்களையும் வீசினார்கள். இதில் 16 பேர் காயம் அடைந்தனர்.
 
இந்த மோதலின் போது திரிணாமூல் காங்கிரசை சேர்ந்தவர்கள் துப்பாக்கியால் சுட்டதாகவும், இதில் தங்கள் கட்சியைச் சேர்ந்த 4 பேர் காயம் அடைந்ததாகவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்தவர்கள் தெரிவித்தனர். ஆனால் துப்பாக்கி சூடு எதுவும் நடைபெறவில்லை என்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்ட் தன்மோய் ராய்சவுத்ரி மறுத்துள்ளார்.
 
கிழக்கு கொல்கத்தாவில் தில்ஜாலா என்ற இடத்தில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அலுவலகம் தாக்கப்பட்டது. தேர்தலின் போது நடந்த மோதல்களில் மொத்தம் 21 பேர் காயம் அடைந்தனர். ஒரு சில இடங்களில் மோதல்கள் நடைபெற்ற போதிலும், பொதுவாக வாக்குப்பதிவு அமைதியாக நடந்து முடிந்தது.