வியாழன், 28 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Suresh
Last Updated : செவ்வாய், 25 ஆகஸ்ட் 2015 (08:05 IST)

நாடு திரும்பிய செவிலியர்கள் மீண்டும் ஏமன் நாட்டிற்குச் செல்ல வேண்டாம்: சுஷ்மா சுவராஜ்

உள்நாட்டு போர் தொடர்ந்து நடப்பதால் நாடு திரும்பிய செவிலியர்கள் மீண்டும் ஏமன் நாட்டிற்குச் செல்ல வேண்டாம்  என்று வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் கேட்டுக் கொண்டுள்ளார்.
 
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் ஏமன் நாட்டில் உள்நாட்டு போர் ஏற்பட்டது. இதனால், அங்குள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் பணியாற்றி வந்த செவிலியர்களை இந்திய அரசு போர்க்கால அடிப்படையில் மீட்டது.
 
இவ்வாறு மீட்கப்பட்ட செவிலியர்களுள் பெரும்பான்மையானவர்கள் கேரளாவைச் சேர்ந்தவர்கள். இந்தியா திரும்பிய செவிலியர்களுக்கு மத்திய அரசு நிவாரண உதவிவழங்கியது.
 
இந்நிலையில் கேரளாவைச் சேர்ந்த செவிலியர்கள் சிலர், மீண்டும் ஏமன் நாட்டிற்குச் சென்று வேலை பார்ப்பதற்காக, விசா உள்ளிட்டவற்றை ஏற்பாடு செய்து வந்தனர்.
 
இது குறித்து தகவல் அறிந்த மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் கேரள முதலமைச்சர் உம்மன்சாண்டியிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார்.
 
அப்போது, ஏமனில் இருந்து நாடு திரும்பிய செவிலியர்களுள் சிலர் மீண்டும் அங்கு பணிக்குச் செல்ல இருப்பதாக உளவுத்துறை தகவல் அளித்துஉள்ளது என்றும் ஏமனில் தொடர்ந்து உள்நாட்டு போர் நடந்து வருவதால் இந்தியா திரும்பிய செவிலியர்கள் மீண்டும் அங்கு சென்று பணியாற்ற முடியாத நிலை உள்ளது என்றும் கூறியுள்ளார்.
 
மேலும், கேரளாவைச் சேர்ந்த செவிலியர்கள் யாரும் ஏமனுக்கு வேலைக்குச் செல்ல வேண்டாம் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.
 
இந்நிலையில், உம்மன்சாண்டி கேரளாவிலிருந்து ஏமன்நாட்டுக்கு செவிலியர்கள் செல்லாமல் பார்த்து கொள்வதாக உறுதியளித்துள்ளதாகக் கூறப்படுகிறது.