வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Suresh
Last Updated : வியாழன், 10 டிசம்பர் 2015 (07:58 IST)

சிவில் சர்வீசஸ் தேர்வை ஒத்தி வைக்க வாய்ப்பு இல்லை: மத்திய பணியாளர் தேர்வு ஆணையம்

18 ஆம் தேதி நடைபெறவுள்ள சிவில் சர்வீசஸ் தேர்வை தள்ளிவைக்க வாய்ப்பு இல்லை என்று மத்திய பணியாளர் தேர்வு ஆணைய தலைவர் தீபக் குப்தா தெரிவித்துள்ளார்.


 

 
தமிழகத்தில் பல பகுதிகள் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டிருப்பதால் வருகிற 18 ஆம் தேதி நடைபெறுவதாக உள்ள சிவில் சர்வீசஸ் தேர்வை தள்ளி வைக்க வேண்டும் என்று கடந்த 7 ஆம் தேதி டெல்லி மேல் சபையில் கேள்வி நேரத்துக்கு முன்னர் திமுக எம்.பி. திருச்சி சிவா வேண்டுகோள் விடுத்தார்.
 
இது குறித்து அப்போது திருச்சி சிவா பேசுகையில், "தேர்வு எழுதுவதற்காக தமிழகத்தில் காத்திருக்கும் இளைஞர்களும், பெண்களும் தமிழகத்தில் ஏற்பட்ட பேரிடரின் விளைவால் தங்கள் வெற்றி வாய்ப்பை இழக்கும் ஆபத்து உள்ளது.
 
இந்த விஷயத்தில் அக்கறையுடனும், மனித தன்மையுடனும் அணுகி மத்திய பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி) நடத்தும் சிவில் சர்வீசஸ் தேர்வுகளை 2 வாரங்களுக்கு தள்ளி வைக்க வேண்டும்" என்று கேட்டுக் கொண்டார்.
 
இது குறித்து பிரதமர் நரேந்திர மோடிக்கு திருச்சி சிவா கடிதமும் அனுப்பினார். இதேபோல தமிழக அரசியல் கட்சி தலைவர்களும் மத்திய அரசுக்கு கோரிக்கையை விடுத்தனர். 
 
இந்நிலையில், நேற்று டெல்லியில் மத்திய பணியாளர் தேர்வு ஆணையத்தின் தலைவர் தீபக் குப்தாவை நேரில் சந்தித்து இது தொடர்பாக சிவா கோரிக்கை மனு ஒன்றை கொடுத்தார்.
 
அப்போது, ஏற்கனவே சிவில் சர்வீசஸ் தேர்வுகளுக்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. தமிழகத்தில் இருந்து விண்ணப்பித்த 860 பேரில் பெரும்பாலானோர் இந்த தேர்வுக்கான ஹால் டிக்கெட்டுகளை ஏற்கனவே இணையத்தில் இருந்து பதிவிறக்கம் செய்துள்ளனர். 
 
மத்திய பணியாளர் தேர்வு ஆணையம் நடத்தும் தேர்வுகள் இதற்கு முன்பு எந்த ஒரு சூழ்நிலையிலும் தள்ளி வைக்கப்பட்டது இல்லை.
 
எனவே, 18 ஆம் தேதி நடைபெறவுள்ள சிவில் சர்வீசஸ் தேர்வை தள்ளி வைக்க வாய்ப்பு இல்லை என்று தீபக் குப்தா தன்னிடம் தெரிவித்ததாக சிவா டெல்லியில் செய்திளாகர்களிடம் கூறினார்.