1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By K.N.Vadivel
Last Modified: சனி, 9 மே 2015 (11:48 IST)

செம்மரக் கடத்தல் வழக்கு - சீனாவைச் சேர்ந்த முக்கியப் புள்ளி கைது

செம்மரக் கடத்தல் வழக்கில், சீனாவைச் சேர்ந்த செம்மரக் கடத்தல் மன்னன் யங் பிங் என்பவரை, ஆந்திர காவல்துறையினர் கைது செய்தனர்.
 

 
கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆந்திர வனப்பகுதியில் செம்மரக்கட்டைகள் கடத்தியதாகக் கூறி, தமிழர்கள் 20 பேரை ஆந்திர வனத்துறையினர் சுட்டுப் படுகொலை செய்தனர். இந்த படுகொலைக்கு தமிழக அரசியல் கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தனர். மேலும், இந்த சம்பவம் இந்தியா முழுக்க எதிரொலித்தது.
 
இந்நிலையில், செம்மரக் கடத்தல் வழக்கில் தெலுங்கு பட தயாரிப்பாளர் மஸ்தான் வலி, நடிகை நீத்து அகர்வால், சென்னையை சேர்ந்த நடிகர் சரவணன், சவுந்தரராஜன், சண்முகம், செல்வராஜ் உள்ளிட்ட பலரையும் ஆந்திர காவல்துறையினர் கைது செய்தனர்.
 
மேலும், தமிழகம், கேரளா, கர்நாடகா போன்ற பகுதிகளிலும் செம்மரக் கடத்தல் கும்பலை பிடிக்க ஆந்திரா காவல்துறையினர் தீவிரம் காட்டி வந்தனர்.
 
அதன் எதிரொலியாக, சென்னை செங்குன்றம், மாதவரம் பகுதிகளிலும் சோதனை நடத்தினர். தூத்துக்குடியில் பதுக்கி வைத்திருந்த செம்மரகட்டைகளை பறிமுதல் செய்தனர்.
 
இந்த நிலையில், ஆந்திரா மாநிலம், சித்தூரை சேர்ந்த கடத்தல்காரன் சீனிவாச ரெட்டி என்பவரை காவல்துறையினர் கைது செய்தனர். அவனிடம் விசாரணை நடத்திய போது, சீனாவை சேர்ந்த முக்கிய கடத்தல்காரான யங் பிங்க் ஹைதராபாத்தில் தங்கி இருப்பதாக தகவல் தெரிவித்தார்.
 
இதனையடுத்து, ஹைதராபாத் சென்ற காவல்துறையினர், அங்கு பதுங்கி செம்மரக் கடத்தல் மன்னன் யங் பிங்க் என்பவரை கைது செய்தனர்.
 
இவர் சீனா, மலேசியா உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு செம்மரக் கட்டை கடத்தலில் ஈடுபட்டது தெரிய வந்தது. அவருடன் தங்கியிருந்த கடப்பா மாவட்டத்தை சேர்ந்த சீனிவாசன் என்பவரையும் காவல்துறையினர் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
 
ஆந்திராவிலிருந்து வெட்டி எடுக்கப்படும் செம்மரங்கள், சீனா, மியான்மர், ஜப்பான் மற்றும் கிழக்கு ஆசிய நாடுகளுக்கு அதிக அளவில் கடத்தப்படுகிறது. அங்கு, ஒரு டன் செம்மரம், சர்வதேச சந்தையில், ரூபாய் 20 லட்சம் முதல் ரூபாய் 25 லட்சம் வரை விலை போகிறது என்பது குறிப்பிடதக்கது.