வியாழன், 28 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By வீரமணி பன்னீர்செல்வம்
Last Modified: திங்கள், 11 ஆகஸ்ட் 2014 (19:16 IST)

நீதித்துறைக்கு எதிராக தவறான பிரச்சாரம்: உச்ச நீதிமன்றம் கவலை

நீதித்துறையின் புகழுக்கு களங்கம் ஏற்படும் வகையில் தவறான பிரச்சாரம் செய்யப்படுவதாக கவலை தெரிவித்துள்ள உச்ச நீதிமன்றம், நீதித்துறை மீது மக்கள் கொண்டிருக்கும் நம்பிக்கையை குலைத்து விடாதீர்கள் என்று கேட்டுக்கொண்டுள்ளது.
 
நீதிபதிகள் நியமனம் குறித்த முறையை மாற்றம் செய்யக் கோரி உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தபோது அதனை தள்ளுபடி செய்து உத்தரவிட்ட தலைமை நீதிபதி ஆர்.எம்.லோதா,  நீதித்துறையின் புகழுக்கு களங்கம் ஏற்படும் வகையில் தவறான பிரச்சாரம் செய்யப்படுவதாகவும், இது நீதித்துறையில் மிகப்பெரிய சேதாரத்தை ஏற்படுத்திவிடும் என்றும் கூறினார். 
 
நீதித்துறை மீது மக்கள் கொண்டிருக்கும் நம்பிக்கையை குலைத்துவிட வேண்டாம் என கேட்டுக்கொண்ட அவர், உயர் நீதிமன்ற நீதிபதிகளை நியமனம் செய்வதற்கான தற்போதைய கொலிஜியம் முறை சரியானது என்றும் அவர் கூறினார்.
 
கொலிஜியம் முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பேட்ச் நீதிபதிகளில் தாமும் ஒருவர் என்றும், அதே போன்று நரிமன் கடைசி பேட்ச் நீதிபதி என்றும், இந்த கொலிஜியம் முறை சரியானது அல்ல என்றால் நாங்களும் சரியானவர்கள் அல்லாதவர்களாகிவிடுவோம் என்றும் லோதா மேலும் கூறினார்.
 
அரசியல் நிர்ப்பந்தத்தின் பேரில் ஊழல் நீதிபதி ஒருவருக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் கூடுதல் நீதிபதியாக பதவி நீட்டிப்பு செய்ததாக உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி உள்ளிட்ட மூவர் மீது பிரஸ் கவுன்சில் ஆப் இந்தியாவின் தலைவரும், முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதியுமான மார்க்கண்டேய கட்ஜு குற்றம்சாற்றியிருந்ததோடு, உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றங்களில், நீதிபதிகளாக பதவி வகித்தவர்கள் மீதான ஊழல் புகார்களை, உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதிகள் உரிய முறையில் விசாரித்து நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் புகார் கூறியிருந்தார்.
 
இந்நிலையிலேயே உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி மேற்கண்டவாறு கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.