ரூ.88 கோடி மோசடி செய்துவிட்டு வெளிநாட்டுக்கு தப்பியோடிய பெண் கணவருடன் கைது... சிபிஐ அதிரடி நடவடிக்கை...
ரூ. 88 கோடி முதலீட்டு மோசடி வழக்கில் தேடப்பட்டு வந்த முக்கிய குற்றவாளியான விசாகா ரத்தோட், ஐக்கிய அரபு எமிரேட்ஸில் இருந்து இந்தியாவுக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளார். மத்திய புலனாய்வு அமைப்பு, வெளியுறவு அமைச்சகம் மற்றும் உள்துறை அமைச்சகம் இணைந்து இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளன.
விசாகா ரத்தோட் தனது கணவர் அவினாஷ் ரத்தோட்டுடன் இணைந்து, முதலீட்டாளர்களுக்கு மாதந்தோறும் அதிக வட்டி தருவதாக பொய்யான வாக்குறுதி அளித்து ரூ. 88 கோடி வரை மோசடி செய்துள்ளார். இந்த நிதியை பல்வேறு வங்கி மற்றும் டிமேட் கணக்குகளுக்கு மாற்றி முறைகேடு செய்ததாக இவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டது.
இந்திய அதிகாரிகளின் வேண்டுகோளின்படி, இண்டர்போல் மூலம் இவர்களுக்கு எதிராக 'ரெட் நோட்டீஸ்' பிறப்பிக்கப்பட்டது. இதன் அடிப்படையில், வழக்கின் சூத்திரதாரியான அவினாஷ் ரத்தோட் ஜூலை 23 அன்று எமிரேட்ஸிலிருந்து இந்தியாவுக்கு கொண்டுவரப்பட்டு புனே காவல்துறையால் கைது செய்யப்பட்டார்.
அதனைத் தொடர்ந்து, ஆகஸ்ட் 3 அன்று புனே வந்தடைந்த விசாகா ரத்தோட்டையும் மகாராஷ்டிர காவல்துறை கைது செய்து காவலில் எடுத்தது. இந்தியாவில் இருந்து தப்பி செல்லும் குற்றவாளிகளை மீட்கும் தீவிர நடவடிக்கையின் பகுதியாக, 2019 முதல் ஜூலை 2026 வரை 36 நாடுகளிலிருந்து 274 தலைமறைவு குற்றவாளிகளை இந்தியா வெற்றிகரமாக கொண்டுவந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Edited by Siva
