மும்பையில் 14 பேர் படுகொலை : பிணக்குவியலை கண்ட பத்திரிக்கையாளர் அதிர்ச்சி மரணம்


Murugan| Last Updated: திங்கள், 29 பிப்ரவரி 2016 (15:02 IST)
மகராஷ்டிர மாநிலத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 14 பேரை கத்தியால் கழுத்தை அறுத்து கொலை செய்து விட்டு, கொலையாளியும் தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில், அதை படம்பிடிக்கச் சென்ற ஒரு தனியார் தொலைக்காட்சி ஊழியர் மாரடைப்பில் மரணம் அடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

 
மகாராஷ்டிரா மாநிலம் தானே நகரில் உள்ள கசார்வடாவலி பகுதியில் 35 வயது மதிக்கத்தக்க ஒருவர் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 14 பேர்களுக்கு மயக்க மருந்து கொடுத்து அவர்கள்  கழுத்தை கத்தியால் அறுத்துள்ளார்.  அதில் அனைவரும் பலியாகினர். அதில் 7 குழந்தைகளும் 6 பெண்களும் அடக்கம். அதன்பின் அவர் கையில் கத்தியுடன் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டார். சொத்து தகராறின் காரணமாக இந்த கொலைகள் நடந்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கிறார்கள். 
 
இந்நிலையில், அந்த சம்பவத்தை படம் பிடிப்பதற்காக,  ஒரு தனியார் தொலைக்காட்சி கேமராமேன் ரதன் பவுமிக்(30) என்பவர் சம்பவ இடத்திற்கு சென்றார். அந்த வீட்டிற்குள் சென்று, இறந்து கிடந்த பிணக்குவியல்களை அவர் பார்த்த அதிர்ச்சியில் அங்கேயே அவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது. உடனே அவர் தானே மாநகராட்சி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
 
ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் அவரது குடும்பத்தை கலக்கத்தில் ஆழ்த்தியுள்ளது.
 
இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதில் மேலும் படிக்கவும் :