வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Suresh
Last Updated : வியாழன், 23 ஏப்ரல் 2015 (14:01 IST)

கொடிய குற்றங்களில் ஈடுபடும் சிறுவர்களை இ.பி.கோ. சட்டத்தின் கீழ் விசாரிக்கலாம்: சட்ட திருத்தத்திற்கு ஒப்புதல்

கற்பழிப்பு, கொலை ஆகிய கொடிய குற்றங்களில் ஈடுபடும் 16 முதல் 18 வயது வரையிலான சிறுவர்களை இந்திய தண்டனை சட்டத்தின் கீழ் விசாரிக்கலாம் என்ற சட்ட திருத்தத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
 
குற்றச் செயல்களில் ஈடுபடும் 18 வயதுக்கு உட்பட்டவர்கள், இளம் சிறார்களாக கருதப்படுகிறார்கள். அவர்கள் மீதான குற்றச்சாட்டுகள், வயது வந்தோருக்கான இ.பி.கோ. சட்டத்தின் கீழ் விசாரிக்கப்படுவது இல்லை. இளம் சிறார்கள் நீதி சட்டத்தின் கீழ்தான் விசாரிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், 18 வயதுக்கு உட்பட்டவர்கள், கொலை, கொள்ளை, கற்பழிப்பு போன்ற கொடிய குற்றங்களில் ஈடுபடுவது அதிகரித்துள்ளது. எனவே, இளம் சிறார்கள் நீதி சட்டத்தை மறுஆய்வு செய்ய வேண்டியது அவசியம் என்று சமீபத்தில் உச்ச நீதிமன்றம் தெரிவித்தது.     
 
இந்நிலையில்,  இளம் சிறார்கள் நீதி சட்டத்தில் திருத்தம் செய்து மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை அமைச்சகம் புதிய வரைவு மசோதாவை உருவாக்கியுள்ளது. இந்த திருத்தத்தின்படி, 16 முதல் 18 வயதுக்கு உட்பட்ட, கொடிய குற்றங்களில் ஈடுபடும் இளம் சிறார்களை இ.பி.கோ. சட்டத்தின் (இந்திய தண்டனை சட்டம்) கீழ் விசாரிக்கலாம்.
 
இதற்கு நாடாளுமன்ற நிலைக்குழு எதிர்ப்பு தெரிவித்தபோதிலும், இந்த சட்ட திருத்தத்தை அமல்படுத்த மத்திய பெண்கள் அமைச்சகம் முடிவு செய்துள்ளது.  இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. அதில், 16 முதல் 18 வயதுக்கு உட்பட்ட, கொடிய குற்றங்களில் ஈடுபடுபவர்களை இ.பி.கோ. சட்டத்தின் கீழ் விசாரிக்கலாம் என்ற யோசனைக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.
 
இது குறித்த சட்ட திருத்தத்துக்கும் ஒப்புதல் அளிக்கப்பட்டது. இத்தகவலை மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.      
 
இது குறித்து வெளியிடப்பட்ட மத்திய அரசின் செய்திக் குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:- 
 
16 முதல் 18 வயதுக்கு உட்பட்டவர்கள் கொடிய குற்றங்களில் ஈடுபட்டால், அவர்கள் சிறுவரா அல்லது வயது வந்தவரா என்று இளம் சிறார்கள் நீதி வாரியம் ஆய்வு செய்யும். அதில், மனநல நிபுணர்களும், சமூகவியல் நிபுணர்களும் இடம்பெறுவார்கள். குறிப்பிட்ட குற்றத்தை சிறுவராக செய்திருந்தது தெரிய வந்தால், அவர்களின் உரிமைகள் பாதுகாக்கப்படும். அவர் சிறுவரா? வயது வந்தவரா? என்ற இந்த ஆய்வின் அடிப்படையில்தான், உரியமுறையில் விசாரணை நடைபெறும்.  இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

16 வயது முதல் 18 வயதுவரையுள்ள சிறுவர்கள் பாலியல் பலாத்கார நடவடிக்கைகளில் ஈடுபடுவது அதிகரித்துவரும் நிலையில் இந்த சட்ட திருத்தம் கொண்டுவர மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.