1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: செவ்வாய், 23 பிப்ரவரி 2016 (16:24 IST)

பேருந்துகளுக்கு தீ; ரயில் மறியல் - ஹரியானாவை தொடர்ந்து ராஜாஸ்தானிலும் போராட்டம்

ஹரியானவை தொடர்ந்து ஓபிசி பட்டியலில் சேர்க்கக் கோரி, ஜாட் சமூகத்தை சேர்ந்த போராட்டக்காரர்கள் 2 பேருந்துகள் தீயிட்டு கொளுத்தியுள்ளனர். இதனால் போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டு உள்ளது.
 
போராட்டத்தின்போது எரிக்கப்பட்ட ஒரு பேருந்து...
ஹரியானாவில் மாநிலத்தில் கணிசமாக வசித்து வரும் ஜாட்சமூகத்தினர், தங்களை இதர பிற்படுத்தப்பட்டோர் (ஓபிசி)பட்டியலில் சேர்க்க வலியுறுத்தி கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். சில பகுதிகளில் இந்த போராட்டம் வன்முறையாகவும் மாறியது. பேருந்துகள் தீவைத்து கொளுத்தப்பட்டன.
 
போராட்டக்காரர்கள் மீது காவல்துறை நடத்திய துப்பாக்கிச் சூட்டிற்கு ஹரியானா மாநிலம் முழுவதும் 10 பேர் பலியாகினர். 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். பல்வேறு மாவட்டங்களில் கடைகள் அடைக்கப்பட்டன. ரயில் சேவையும் பாதிக்கப்பட்டது. 9 நகரங்களில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் மக்களின் இயல்புவாழ்க்கை முடங்கி உள்ளது.
 
வன்முறை பாதித்த மாவட்டங்களில் 5,000 துணை ராணுவ வீரர்கள், பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு உள்ளனர். ஜாட் சமூகத்தினரின் போராட்டம் தொடர்பாக, மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், கோரிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளிக்கப்பட்டதைத் தொடர்ந்து, ஹரியானாவில் தற்போது இயல்பு நிலை திரும்பத் தொடங்கியுள்ளது.
 
அமைச்சருடனான பேச்சுவார்த்தையில் தங்களின் கோரிக்கைகள் ஏற்கப்பட்டு உள்ளதாகவும், மக்கள் போராட்டத்தைக் கைவிடுமாறும் ஜாட் சமூகத் தலைவர் ஜெய்பால் சிங் சங்வான் கேட்டுக் கொண்டுள்ளார்.
 
இதனிடையே, ராஜஸ்தான் மாநிலத்தில் ஜாட் சமூகத்தினர் இதே கோரிக்கைக்காக போராட்டத்தைத் தொடங்கியுள்ளனர். கிழக்கு ராஜஸ்தானில் போராட்டக்காரர்கள் இரண்டு பேருந்துகளை தீயிட்டு கொளுத்தினர். ரயில்வே தண்டவாளங்கள் மற்றும் சாலைகளையும் மறித்து அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
 
தோர்மி பகுதியில் ஆயில் டெப்போவின் அருகே ஒரு பேருந்தும், செவார் பகுதியில் மற்றொரு பேருந்தும் தீ வைத்து எரிக்கப்பட்டது. தீக், ஜெர்பூர் மற்றும் மதுரா நெடுஞ்சாலைகள் மற்றும் ஜெய்ப்பூர் - மும்பை ரயில் தண்டவாளங்கள் அடைக்கப்பட்டு உள்ளன. வன்முறை பரவி வரும் பகுதிகளுக்கு கூடுதல் போலீஸ் படை அனுப்பப்பட்டு உள்ளது.