தஹல்கா பெண் ஊழியருக்கு லிஃப்டில் பாலியல் தொல்லை.. நிறுவனர் தேஜ்பால் குற்றவாளி.. நீதிமன்றம் தீர்ப்பு..
2013-ஆம் ஆண்டு கோவா சொகுசு விடுதி லிஃப்டில் தஹல்கா பெண் ஊழியருக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில், அந்த இதழின் நிறுவனரான தருண் தேஜ்பாலை குற்றவாளி என பம்பாய் உயர் நீதிமன்றத்தின் கோவா அமர்வு தீர்ப்பளித்துள்ளது.
கடந்த 2021-ஆம் ஆண்டு கோவா விசாரணை நீதிமன்றம் அவரை விடுவித்து அளித்த தீர்ப்பை ரத்து செய்த நீதிபதிகள் டாக்டர் நீலா கோகலே மற்றும் அமித் ஜாம்சண்டேகர் அடங்கிய அமர்வு, தருண் தேஜ்பால் குற்றவாளி என்பதை உறுதி செய்துள்ளது.
இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவுகள் 376(2)(f), 376(2)(k), 354A மற்றும் 354B ஆகிய பிரிவுகளின் கீழ் அவர் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ளார். இத்தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய ஏதுவாக, தீர்ப்பை அமல்படுத்துவதற்கு எட்டு வாரங்கள் இடைக்காலத் தடை விதிக்க வேண்டும் என தேஜ்பால் தரப்பு கேட்டுக்கொண்டுள்ளது. மேலும், தனக்கு 62 வயதாவதாகவும், ஏற்கனவே ஆறு மாதங்கள் சிறை தண்டனை அனுபவித்துள்ளதாகவும் கூறி தேஜ்பால் கருணை மனு கோரினார்.
ஆனால், இந்த கோரிக்கையைக் கடுமையாக எதிர்த்த அரசு தரப்பு வழக்கறிஞர் துஷார் மேத்தா, "பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு இவர் தந்தை ஸ்தானத்தில் இருந்தவர். ஒரு பெண் வேண்டாம் என்று சொன்னால் அதற்கு வேண்டாம் என்றுதான் அர்த்தம் என்பதை சமூகம் உணரும் வகையில் நீதிமன்றம் கடுமையான தண்டனை வழங்கி முன்மாதிரி அமைக்க வேண்டும்" என வாதிட்டார். 13 ஆண்டுகால இந்த வழக்கின் தீர்ப்பு இந்திய அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Edited by Siva
