1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By வீரமணி பன்னீர்செல்வம்
Last Modified: செவ்வாய், 26 மே 2015 (18:25 IST)

போபர்ஸ் ஆயுத பேரத்தை ஊழல் என்பதா?: பிரணாப் முகர்ஜி ஆவேசம்!

'நீதிமன்ற தீர்ப்பு வராமல் போபர்ஸ் ஆயுத பேரத்தை ஊழல் என்று எப்படி சொல்லலாம்?' என ஸ்வீடன் பத்திரிகையாளரிடம் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி ஆவேசமாக கேள்வி எழுப்பினார்.
 

 
பிரணாப் முகர்ஜி, விரைவில் ஸ்வீடன் நாட்டுக்கு அரசு முறைப்பயணமாக செல்ல உள்ளார். இதனையொட்டி 'Dagens nyhetter' என்ற ஸ்வீடன் நாட்டு பத்திரிகை ஒன்று, பிரணாப் முகர்ஜியிடம் பேட்டி எடுத்தது. அப்போது போபர்ஸ் ஆயுத பேரம் தொடர்பாகவும், அதில் நடந்த ஊழலில் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்திக்கு தொடர்பு இருப்பதாக எழுந்த குற்றச்சாட்டு குறித்தும் கேள்வி எழுப்பப்பட்டது.
 
உடனே ஆவேசமான ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, "போபர்ஸ் ஆயுத பேரத்தில் ஊழல் நடந்திருப்பதாக இந்தியாவின் எந்த ஒரு நீதிமன்றமும் தீர்ப்பு வழங்கவில்லை. இந்த வழக்கின் விசாரணை எந்த நீதிமன்றத்திலும் நடைபெறவில்லை. அதிகாரபூர்வ இயந்திரம் ஒன்று போபர்ஸ் ஆயுத பேரத்தில் ஊழல் நடந்திருக்கிறது எனக் கூறி தண்டனையை அறிவிக்காத நிலையில், போபர்ஸ் ஊழல் என நீங்கள் எப்படிக் குறிப்பிடுவீர்கள்?" என கேள்வி எழுப்பினார்.
 
"உங்களுக்கு சில சந்தேகங்கள் இருக்கலாம். ஆனால் அவை சான்றாகாது" என்றும் அவர் மேலும் கூறினார். 
 
அப்படியானால், போபர்ஸ் வழக்கு ஊடகங்களால் மட்டுமே விசாரணை செய்யப்பட்டது எனக் கூறுகிறீர்களா? எனக் கேட்டபோது, "எனக்குத் தெரியாது. நான் அந்த வார்த்தைகளை சொல்லவில்லை" என பதிலளித்தார்.
 
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் ஆட்சி காலத்தில், ஸ்வீடன் நாட்டின் போபர்ஸ் நிறுவனத்திடமிருந்து பீரங்கிகளை வாங்க மேற்கொள்ளப்பட்ட பேரத்தில் ஊழல் நடைபெற்றதாகவும், பெரும் தொகை லஞ்சமாக கைமாறியதாகவும், குறிப்பாக ராஜீவ் காந்திக்கு இதில் தொடர்பு இருந்ததாகவும் அப்போது குற்றச்சாட்டு எழுந்ததும், கடைசியில் யாருமே இவ்வழக்கில் தண்டிக்கப்படாமல், முந்தைய மன்மோகன் சிங் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி காலத்தில் இவ்வழக்கே நீர்த்துபோனதும் குறிப்பிடத்தக்கது. மேலும் ராஜீவ் காந்தி அரசில் பிரணாப் முகர்ஜி அமைச்சராக இருந்ததும் குறிப்பிடத்தக்கது.