வழக்கத்திற்கு மாறாக அமளியில் ஈடுபட்ட பாஜக எம்பிக்கள்.. நாடாளுமன்றம் ஒத்திவைப்பு..!
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரின் கடைசி வார அமர்வு இன்று கூடிய நிலையில், பாஜக நாடாளுமன்ற உறுப்பினர்களின் அமளியால் இரு அவைகளும் நண்பகல் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டன.
நேற்று டெல்லியில் காங்கிரஸ் நடத்திய 'வாக்குத் திருட்டு'க்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில், பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய அரசுக்கு எதிராக "வாக்குத் திருடர்களே, அரியணையை விட்டு வெளியேறுங்கள்" என்ற ஆட்சேபனைக்குரிய முழக்கங்கள் எழுப்பப்பட்டன. இதில் மல்லிகார்ஜூன கார்கே, சோனியா காந்தி, ராகுல் காந்தி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இந்த முழக்கங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து, இன்று நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் பாஜக எம்பிக்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர். மாநிலங்களவையில் பேசிய மத்திய அமைச்சர் ஜெ.பி.நட்டா, "ஒரு பிரதமருக்கு எதிராக இப்படி பேசுவது கண்டிக்கத்தக்கது. இது காங்கிரஸ் கட்சியின் மோசமான மனநிலையை காட்டுகிறது. இதற்காக சோனியா காந்தி நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்," என்று வலியுறுத்தினார்.
தொடர்ந்து நிலவிய கூச்சல் மற்றும் குழப்பத்தால், அவை நடவடிக்கைகளை அவை தலைவர் ஒத்திவைத்தார்.
Edited by Mahendran