தேர்தல் பிரச்சாரமா? உல்லாச சுற்றுப்பயணமா? ராகுல் காந்தியை கிண்டல் செய்த பாஜக..!
பிகார் சட்டமன்ற தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மத்திய பிரதேசத்தில் உள்ள காடுகளில் சுற்றுலா சஃபாரி சென்றது குறித்து பாஜக கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளது.
மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி சஃபாரி மேற்கொண்ட வீடியோவை பகிர்ந்துள்ள பாஜகவின் தேசிய செய்தித் தொடர்பாளர் ஷேஹ்ஷாத் பூனவல்லா, "ராகுல் காந்தியை பொறுத்தவரை, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் பதவி என்பது ஒரு சுற்றுலா அல்லது கொண்டாட்டத்தின் அடையாளமே" என்று கிண்டலடித்தார்.
"பிகாரில் தேர்தல் நடக்கும்போது அவர் காட்டில் சவாரி செய்கிறார். இதுவே அவருக்கு எது முன்னுரிமை என்பதை காட்டுகிறது" என்று பூனவல்லா கேள்வியெழுப்பினார். மேலும், தேர்தலில் தோல்வியடைந்தால், ராகுல் வழக்கம்போல் தேர்தல் ஆணையத்தின் மீது பழிபோட்டுவிட்டு, மோசடி குறித்த பவர் பாயின்ட் விளக்கங்களை வழங்குவார் என்றும் அவர் சாடினார்.
ராகுல் காந்தி, மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் நிர்வாகிகளுக்கான பயிற்சி முகாமில் பங்கேற்க சென்றபோது இந்த சஃபாரி பயணத்தை மேற்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
Edited by Mahendran