போலி கல்வி சான்றிதழ் மூலம் 3000 ஆசிரியர்கள் நியமனம்... சம்பளத்தை வட்டியோடு திரும்ப வாங்க அரசு முடிவு..
பீகாரில் போலியான கல்வி சான்றிதழ்களை கொண்டு ஆசிரியர் பணி பெற்ற 3,000-க்கும் மேற்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது.
2006 முதல் 2015-ஆம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலத்தில் நடைபெற்ற ஆசிரியர் நியமனங்கள் குறித்து மாநில விழிப்புணர்வு பணியகம் நடத்திய விரிவான விசாரணையில், பெருமளவிலான முறைகேடுகள் மற்றும் போலி சான்றிதழ் பயன்பாடு கண்டறியப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து, சம்பந்தப்பட்ட ஆசிரியர்களை பணியிலிருந்து நீக்குவதற்கும், அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுப்பதற்கும் கல்வித்துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. குற்றம் சாட்டப்பட்ட ஆசிரியர்கள் ஏற்கனவே பணியாற்றிய காலத்திற்கான ஊதியம் மற்றும் இதர படிகளை வட்டியுடன் திரும்பப் பெறுவதற்கும் அரசு திட்டமிட்டுள்ளது.
பதவி விலகிய ஆசிரியர்களாக இருந்தாலும், அவர்கள் மீதான சட்டப்பூர்வமான மற்றும் துறைரீதியான நடவடிக்கைகள் தொடரும் என்று அதிகாரிகள் தெளிவுபடுத்தியுள்ளனர். கல்வித்துறை அமைச்சர் மிதிலேஷ் திவாரி, முதல்வரின் உத்தரவின் பேரில் இந்த விசாரணை நடத்தப்பட்டதாக குறிப்பிட்டார். ஏற்கனவே பல ஆசிரியர்கள் மீது முதல் தகவல் அறிக்கைகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
Edited by Siva
