1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
  4. bengaluru-shocking-murder-girlfriend-prerna-burns-boyfriend-kiran-alive

சர்ப்ரைஸ் தருவதாகக் கூறி காதலனை உயிருடன் எரித்த காதலி.. பெங்களூருவில் பகீர்

Bengaluru Murder News
கர்நாடக மாநிலம் பெங்களூருவில், தன்னைத் தவிர்த்த காதலனை பழிவாங்கும் நோக்கில், சர்ப்ரைஸ் தருவதாகக் கூறி காதலியே அவரை பெட்ரோல் ஊற்றி உயிருடன் எரித்துக் கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. 
 
 
பெங்களூருவைச் சேர்ந்த பிரேர்னா மற்றும் கிரண் ஆகிய இருவரும் கடந்த சில காலமாக காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில் சமீபகாலமாக இருவருக்கும் இடையே அடிக்கடி கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக, பிரேர்னாவிடம் பேசுவதைத் தவிர்த்து கிரண் அவரைத் தொடர்ந்து புறக்கணித்து வந்துள்ளார். தன்னைத் தவிர்த்துவிட்டுச் செல்லும் காதலன் மீது கடும் ஆத்திரமடைந்த பிரேர்னா, அவரைக் கொலை செய்ய ஒரு பயங்கரமான திட்டத்தைத் தீட்டியுள்ளார்.
 
 
சம்பவத்தன்று காதலன் கிரணைத் தொடர்புகொண்ட பிரேர்னா, தங்களுக்கு இடையேயான பிரச்சனைகளை மறந்துவிட்டு மீண்டும் சேரலாம் என்றும், வெளிநாட்டு பாணியில் தனது காதலை வித்தியாசமாக வெளிப்படுத்தி ஒரு  சர்ப்ரைஸ்  தரப்போவதாகவும் ஆசை வார்த்தை கூறியுள்ளார். இதனை முழுமையாக நம்பிய கிரண், அவர் அழைத்த இடத்திற்குச் சென்றுள்ளார்.
 
அங்கு சென்ற கிரணுக்கு சர்ப்ரைஸ் கொடுப்பதாகக் கூறி, அவரது கண்களைத் துணியால் கட்டியுள்ளார் பிரேர்னா. பின்னர், அவர் தப்பிக்க முடியாதவாறு அவரது கைகள் மற்றும் கால்களைக் கட்டிப்போட்டு நாற்காலியில் அமர வைத்துள்ளார். சர்ப்ரைஸுக்காக கண்மூடிக் காத்திருந்த கிரண் மீது, தான் முன்கூட்டியே மறைத்து வைத்திருந்த பெட்ரோலை ஊற்றி கொடூரமாகத் தீ வைத்துள்ளார்.
 
 
தீ உடல் முழுவதும் பரவி கருகிய நிலையில், கிரண் வலி தாங்க முடியாமல் அலறித் துடித்து உயிருக்கு போராடியுள்ளார். ஆனால், எவ்வித இரக்கமும் இன்றி அவர் துடிதுடித்து இறக்கும் காட்சிகளை பிரேர்னா தனது கேமராவில் வீடியோவாகப் பதிவு செய்துள்ளார்.
 
இந்தச் சம்பவம் குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், உடலைக் கைப்பற்றி வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். போலீசாரின் விசாரணையின் முடிவில்தான், தன்னைத் தவிர்த்த காதலனை பழிவாங்க பிரேர்னா அரங்கேற்றிய இந்த குரூரமான கொலைச் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. போலீசார் பிரேர்னாவைக் கைது செய்து, அவர் பதிவு செய்த வீடியோ ஆதாரங்களையும் கைப்பற்றி அடுத்தகட்ட விசாரணையை முடுக்கிவிட்டுள்ளனர்.
 
சினிமாவை மிஞ்சும் அளவிலான இந்த கொடூரச் சம்பவம் பெங்களூரு மக்கள் மத்தியிலும், சமூக வலைதளங்களிலும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
அடுத்த கட்டுரையில்
புதிய அதிபர் பதவியேற்று ஒரே ஒரு மாதம்தான்.. மீண்டும் நேபாளத்தில் மாணவர்கள் போராட்டம்..!