ஸ்விக்கி, ஸொமட்டோ டெலிவரி ஊழியர்கள் லிஃப்டை பயன்படுத்த கூடாது.. போர்டு வைத்து சிக்கலில் சிக்கிய ஓட்டல்..!
பெங்களூருவில் உள்ள மேகனா ஃபுட்ஸ் என்ற உணவகம், தங்கள் கிளையின் லிஃப்டை ஸ்விக்கி மற்றும் ஸொமாட்டோ டெலிவரி ஊழியர்கள் பயன்படுத்த கூடாது என ஓர் அறிவிப்பை ஒட்டியதால் பெரும் சர்ச்சை வெடித்தது. இந்த அறிவிப்பின் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலானதால், வர்க்க பாகுபாட்டை காட்டுவதாக கூறி உணவகத்தின் மீது கடுமையான விமர்சனங்கள் எழுந்தன.
தங்கள் வணிகம் தொடர்ந்து இயங்க உதவும் நபர்களை அவமதிப்பதாக பயனர்கள் குற்றம் சாட்டினர். எதிர்ப்புகள் வலுத்த நிலையில், மேகனா ஃபுட்ஸ் நிறுவனம் இன்ஸ்டாகிராமில் பகிரங்கமாக மன்னிப்பு கோரியது.
"வாடிக்கையாளர்களுக்கான நெரிசலை குறைக்கவே இந்த அறிவிப்பு ஒட்டப்பட்டது. ஆனால், இது டெலிவரி ஊழியர்களிடம் பாரபட்சம் காட்டுவது போல அமைந்துவிட்டது. அது தவறு. அது ஒருபோதும் அவ்வாறான அறிவிப்பு ஒட்டப்பட்டிருக்க கூடாது," என்று உணவகம் அறிக்கையில் தெரிவித்தது.
அந்த அறிவிப்பு உடனடியாக நீக்கப்பட்டதாகவும், டெலிவரி ஊழியர்களுக்கு எப்போதும் மரியாதை, கண்ணியம் வழங்கப்பட வேண்டும் என்றும் உணவகம் வலியுறுத்தியது.
Edited by Siva