செவ்வாய், 23 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. தேசியச் செய்திகள்
Written By Suresh
Last Modified: செவ்வாய், 29 ஏப்ரல் 2014 (18:39 IST)

தலித் மக்களை இழிவுபடுத்தும் வகையில் பேசிய பாபா ராம்தேவ் மீது தீண்டாமை வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு

உத்தர பிரதேச மாநில தலைநகர் லக்னோவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தலித் மக்களை இழிவுபடுத்தி  பேசிய பாபா ராம்தேவ் மீது தீண்டாமை வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
பாஜக வேட்பாளர்களை ஆதரித்து ராம்தேவ் பல்வேறு இடங்களில் பிரச்சாரம் செய்து வருகிறார். இந்நிலையில், லக்னோவில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் ’உல்லாசப் பயணம் மற்றும் தேன்நிலவுக்கு போவது போல் தலித் மக்களின் வீடுகளுக்கு ராகுல் காந்தி சென்று வருகிறார்’ என்று ராம்தேவ் கூறினார். இதற்கு நாடு முழுவதும் உள்ள தாழ்த்தப்பட்ட மக்கள் உள்ளிட்ட பல்வேறு பிரிவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
 
தேர்தல் பிரச்சாரத்தில் பகைமையை வளர்க்கும் விதத்திலும், ஒருவரின் தனிப்பட்ட வாழ்க்கையை விமர்சித்தும் பேசக்கூடாது என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. மேலும் எந்த மதம் மற்றும் சமூகத்துக்கு எதிராகவும் பேசக்கூடாது என்றும் தேர்தல் ஆணையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
 
இந்நிலையில், தலித் மக்களுக்கு எதிரான ராம்தேவின் பேச்சுக்கு எதிராக, பல்வேறு காவல் நிலையங்களில் புகார் செய்யப்பட்டுள்ளது. அதில் கோரக்பூர், பாட்னா மற்றும் ஆக்ரா காவல்நிலையங்களில் தீண்டாமை வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
 
இதனால் ராம்தேவ் விரைவில் கைது செய்யப்படுவார் என்று எதிர்பாக்கப்படுகிறது. இந்த சட்டத்தின் கீழ் கைது செய்யப்படும் ஒருவருக்கு ஜாமீன் வழங்கப்படமாட்டாது. ராம்தேவின் இத்தகைய பேச்சையடுத்து தேர்தல் ஆணையம், அவரது பிரச்சாரங்களுக்கு தடை விதித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.