1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Suresh
Last Updated : புதன், 13 மே 2015 (11:48 IST)

அரசியல் ஆதரவு இன்றி, அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவோம்: சங்கராச்சார்யா கருத்து

உச்ச நீதிமன்றம் எங்களுக்கு ஆதரவாக தீர்ப்பு வழங்கினால், அயோத்தில் அரசியல் ஆதரவு இன்றி ராமர் கோவில் கட்டுவோம் என்று சங்கராச்சார்யா தெரிவித்துள்ளார். 
 
நாடாளுமன்ற தேர்தலின் போது பாஜக சார்பில் வெளியிடப்பட்ட தேர்தல் அறிக்கையில், அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவோம் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டிருந்தது. 
 
இந்த தேர்தலில் பாஜக தலைமையிலான கூட்டணி வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, ராமர் கோவில் கட்டுவது தொடர்பான கோரிக்கைகள் எழுந்து வருகிறன.
 
சமீபத்தில், அயோத்தியில் விசுவ இந்து பரிசத் சார்பில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட  மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் செய்தியாளர்களிடம் பேசினார். 
 
அப்போது, அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவது குறித்து ராஜ்நாத் சிங்கிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த அவர், "டெல்லி மேல்-சபையில் பாஜக வுக்கு பெரும்பான்மை பலம் இல்லை.
 
எனவே அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவது தொடர்பான சட்டம் இயற்ற நாடாளுமன்றத்தில் தற்போது தீர்மானம் கொண்டு வர முடியாது" என்று தெரிவித்தார்.
 
இந்நிலையில் உச்ச நீதிமன்றம் எங்களுக்கு ஆதரவாக தீர்ப்பு வழங்கினால், அயோத்தில் அரசியல் ஆதரவு இன்றி ராமர் கோவில் கட்டுவோம் என்று இந்து மதத்தலைவர் சங்கராச்சார்யா தெரிவித்துள்ளார்.
 
டெல்லி ராம்லீலா மைதானத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய, சங்கராச்சார்யா ஸ்வரூபானந்த சரஸ்வதி, ராமர் கோவில் கட்டுவது குறித்து பேசுவதை பாஜக தலைவர்கள் நிறுத்திக் கொள்ளவேண்டும் என்று கூறினார்.
 
மேலும், "உங்களிடம் கும்பிட்டு கேட்டுக் கொள்கிறோம், ராம ஜன்மபூமி பற்றி பேசாதீர்கள். நாங்கள் அங்கு ராமர் கோவில் கட்டுவோம்." என்று சங்கராச்சார்யா ராஜ்நாத் சிங்கிற்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். 
 
உச்ச நீதிமன்றம் எங்களுக்கு ஆதரவாக தீர்ப்பு வழங்கினால், அயோத்தில் அரசியல் ஆதரவு இன்றி ராமர் கோவில் கட்டுவோம், கடவுளின் கருணையால், எங்களுக்கு அவர்களுடையை (அரசியல்வாதிகள்) பணம் தேவையில்லை.
 
மக்கள் எங்களுக்கு பணம் வழங்குவார்கள். நாங்கள் கோவிலை கட்டுவோம், எங்களை மன்னித்துவிடுங்கள். இப்போது இது குறித்து ஆலோசிப்பதை தவிர்த்துவிடுங்கள், என்று சங்கராச்சார்யா கூறியுள்ளார்.