வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Suresh
Last Modified: திங்கள், 16 மார்ச் 2015 (11:27 IST)

அயோத்தியில் ராமர் கோயில் கட்டும் திட்டத்தைக் கைவிடவில்லை: ஆர்.எஸ்.எஸ் அறிவிப்பு

அயோத்தியில் ராமர் கோயில் கட்டும் திட்டத்க்க் கைவிடவில்லை என்று ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் பொதுச்செயலாளர் சுரேஷ் பையாஜி ஜோஷி அறிவித்துள்ளார். 
 
ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் 3 நாள் ஆலோசனை கூட்டம் நாக்பூரில் நடைபெற்றது. இந்தத் கூட்டத்திற்குப் பிறகு ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் பொதுச்செயலாளர் சுரேஷ் பையாஜி ஜோஷி செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார்.
 
அப்போது அவர் இது குறித்து கூறியதாவது:-
 
அயோத்தி ராமர் கோயில் பிரச்சினை தொடர்பான வழக்கில் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு இந்துக்களுக்கு சாதமாக உள்ள போதிலும், உச்ச நீதிமன்றத்தில், வழக்கு இன்னும் நிலுவையில் உள்ளது.
 
வழக்கு விசாரணை மெதுவாக நடைபெறுகிறது. இதை விரைவுபடுத்த வேண்டும். இந்த பிரச்சினை தொடர்பாக போராட்டம் எதுவும் நடத்த வேண்டிய தேவை இல்லை. ஆனால் ராமர் கோயில் கட்டும் திட்டத்தை நாங்கள் கைவிட்டு விடவில்லை.
 
வெளிநாடுகளில் வசிக்கும் இந்துக்களுக்கு உரிய பாதுகாப்பும் நீதியும் கிடைப்பது இல்லை. பாகிஸ்தானில் இருந்து நூற்றுக்கணக்கான இந்து குடும்பங்கள் இந்தியாவுக்கு தப்பி வந்து குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் வசித்து வருகின்றன.
 
அவர்கள், இந்திய அரசு தங்களுக்கு குடியுரிமை வழங்க வேண்டும் என்று வற்புறுத்தி வருகிறார்கள். அவர்களுடைய கோரிக்கையை அரசு தீவிரமாக பரிசீலிக்க வேண்டும்.
 
பசுக்கள் கொல்லப்படுவது தடுத்து நிறுத்தப்பட வேண்டும். ஹரியானா மாநில பாஜக அரசு, மாட்டு இறைச்சி விற்பனைக்கு தடை விதித்துள்ளது. பாஜக ஆட்சி பொறுப்பில் இருக்கும் மற்ற மாநிலங்களிலும் இதேபோல் தடை விதிக்க வேண்டும். பசுவதை தடை சட்டம் பேச்சளவில் இருந்தால் மட்டும் போதாது. அதை தீவிரமாக செயல்படுத்த வேண்டும்.
 
மேற்கு வங்க மாநிலம் நாடியா மாவட்டத்தில் கன்னியாஸ்திரி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதை வன்மையாக கண்டிக்கிறேன். நாகரிக சமுதாயத்தில் இதுபோன்ற செயல்கள் கண்டனத்துக்குரியவை. ஆனால் இதுபோன்ற சம்பவங்களை பயன்படுத்தி சமுதாயத்தில் பதற்ற நிலையை ஏற்படுத்த முயற்சிப்பது கண்டிக்கத்தக்கது ஆகும். இவ்வாறு சுரேஷ் பையாஜி ஜோஷி கூறினார்.