வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Murugan
Last Updated : திங்கள், 12 செப்டம்பர் 2016 (16:51 IST)

கர்நாடகாவில் உச்சகட்ட வன்முறை : அச்சத்தில் தமிழர்கள்

கர்நாடகாவில் வன்முறை வெறியாட்டம் : அச்சத்தில் தமிழர்கள்

காவிரி நீர் விவகாரம் தொடர்பாக, கர்நாடகாவில் தமிழர்கள் மீதான தாக்குதல் அதிகரித்துள்ளது.


 

 
தமிழகத்திற்கு காவிரி நீரை, கர்நாடக அரசு திறந்துவிடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அங்கு பல்வேறு கன்னட அமைப்பினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். தமிழக முதல்வர் ஜெயலலிதா உருவ படத்தை எரித்தும் அவர்கள் தங்கள் கோபத்தை வெளிப்படுத்தினர். சமீபத்தில் கன்னட சினிமா நடிகர், நடிகைகள் ஒன்றாக கூடி பேரணி நடத்தி தங்கள் எதிர்ப்பை காட்டினர்.
 
தற்போது அது தனிமனித தாக்குதல்களாகவும் மாறியுள்ளது. சமீபத்தில் கன்னடர்களுக்கு எதிராக முகநூலில் கருத்து கூறிய சந்தோஷ் என்பவர் மீது, பெங்களூரில் தாக்குதல் நடத்தப்பட்டது. அவரது கன்னத்தில் பலமுறை அறைந்த ஒரு கன்னட அமைப்பினர் அவரை முட்டி போட வைத்து மன்னிப்பு கேட்க வைத்தனர். இந்த விவகாரம் தமிழகத்தில் பலத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 


 

 
இந்நிலையில், தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விட வேண்டும் என்று, உச்சநீதிமன்றம் இன்றும் தீர்ப்பளித்தது. இதனால், அங்கு போராட்டம் தீவிரமடைந்துள்ளது. அதனால் முன் எச்சரிக்கையாக அங்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது
 
கர்நாடகாவில் தமிழர்கள் குறிவைத்து தாக்கப்படுவதாக பல்வேறு அதிர்ச்சியான செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கிறது. இதுவரை தமிழகத்தை சேர்ந்த 12 லாரிகள் தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளது. தமிழர்களின் பயணிக்கும் கார்களும் தாக்கப்படுகிறது. 
 
பெங்களூரில், மென்பொருள் நிறுவனங்களில் தமிழகத்தை சேர்ந்த ஏராளமானோர் பணிபுரிந்து வருகின்றனர். அவர்கள் எல்லாம் அவசரமாக வீடு திரும்பிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், அவர்கள் வாகனங்கள் தாக்கப்படலாம் என்பதால், அலுவலங்களிலேயே விட்டுவிட்டு செல்ல அறிவுறுத்தப்பட்டிருக்கிறது. ஏராளமானோர் ஒரே நேரத்தில் வீடு திரும்புவதால், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. 


 

 
அதேபோல், தமிழக வாழ்வுரிமை கட்சி மற்றும் நாம் தமிழர் கட்சியை சேர்ந்தவர்கள், தமிழகத்தில் வாழும் கன்னடர்கள் மீது தாக்குதலை தொடங்கியுள்ளனர். 
 
இந்நிலையில், தமிழகத்தில் வாழும் கன்னடர்களுக்கு பாதுகாப்பு அளிக்கவேண்டும் என்று கர்நாடக முதலமைச்சர் சித்தராமய்யா, தமிழக அரசுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
 
கர்நாடகாவில் தமிழர்கள் மீது தாக்குதல் தொடங்கியுள்ள விவகாரம், அங்கு வாழும் தமிழர்களுக்கு பீதியை ஏற்படுத்தியுள்ளது.