வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Suresh
Last Modified: வெள்ளி, 13 மார்ச் 2015 (09:30 IST)

கெஜ்ரிவால் மீது புகார் கூறிய ஆம் ஆத்மி முன்னாள் எம்.எல்.ஏ.வுக்கு மிரட்டல்

டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் மீது புகார் கூறிய ஆம் ஆத்மி முன்னாள் எம்.எல்.ஏ.வுக்கு தொலைபேசி மூலம் மிரட்டல் வந்துள்ளதாக காவல்துறையினரிடம் புகார் தெரிவித்துள்ளார்.
 
டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவால், கடந்த ஆண்டு மீண்டும் தேர்தலை சந்திக்க விரும்பாமல், ஆட்சி அமைக்க வசதியாக 6 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களை தன்பக்கம் இழுக்க வலை வீசினார் என்று ஆம் ஆத்மி கட்சியின் முன்னாள் எம்.எல்.ஏ. ராஜேஷ் கார்க், சிலதினங்களுக்கு முன்னர் குற்றம்சாட்டி பரபரப்பை ஏற்படுத்தினார்.
 
இந்நிலையில் ஆம் ஆத்மி கட்சியின் விசிறி என்ற பெயரில் அவருக்கு நேற்று வெளிநாட்டில் இருந்து ஒரு தொலைபேசி அழைப்பு வந்துள்ளது.
 
தொலைபேசியில் பேசிய நபர், "இந்த விவகாரத்தை மேலும் கிளப்பக்கூடாது, அப்படி செய்தால், நான் ஒன்றும் செய்யமாட்டேன். ஆனால் என்ன நடக்கும் என்பதை காலம்தான் சொல்லும். நீங்கள் புத்திசாலி என நம்புகிறேன்" என்று கூறி இணைப்பை துண்டித்து விட்டார் என்று கூறப்படுகிறது.
 
இந்த மிரட்டலைப், பதிவு செய்துள்ள ராஜேஷ் கார்க், இது தொடர்பாக டெல்லி காவல்துறையினரிடம் புகார் செய்தார்.
 
இதற்கிடையே காங்கிரஸ் முன்னாள் எம்.எல்.ஏ., ஆசிப் முகமது கான், "துணை முதலமைச்சர் மணிஷ் சிசோடியா, சஞ்சய் சிங் ஆகியோரை நான் சந்தித்தேன். குதிரை பேரத்தில் ஈடுபடவில்லை என சஞ்சய் சிங் கூறினார். அவர் எனக்கு பணம் தருவதாக கூறவில்லை. ஆனால் மந்திரி பதவி பெற்றுத்தருவதாக கூறினார்" என்று புதிய புகாரை கூறியுள்ளார்.