மீண்டும் பாஜகவுடன் கூட்டணி சேரும் முக்கிய கட்சி.. பஞ்சாபிலும் ஆட்சியை பிடித்துவிடுமோ?
வரவிருக்கும் பஞ்சாப் சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு, பாரதிய ஜனதா கட்சியும் சிரோமணி அகாலி தளமும் மீண்டும் கூட்டணி அமைப்பது குறித்து ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
டெல்லியில் உள்ள நாடாளுமன்ற கட்டிடத்தில் பிரதமர் நரேந்திர மோடியை சிரோமணி அகாலி தள தலைவர் சுக்பீர் சிங் பாதல் சந்தித்தது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இக்கூட்டத்தில் கூட்டணி குறித்த பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றதாக தெரிகிறது.
மூன்று சர்ச்சைக்குரிய வேளாண் சட்டங்கள் காரணமாக கடந்த 2020-ஆம் ஆண்டு இந்த இரு பழைய கூட்டாளிகளுக்கும் இடையேயான 20 ஆண்டு கால கூட்டணி முறிந்தது குறிப்பிடத்தக்கது. அதன்பிறகு நடைபெற்ற தேர்தல்களில் தனித்தனியே போட்டியிட்ட போதிலும், தற்போது மாநிலத்தின் தற்போதைய அரசியல் சூழலைக் கருத்தில் கொண்டு கூட்டணிக்கு இரு தரப்பிலும் உள்ள பல தலைவர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். எனினும், முந்தைய காலங்களைப் போலன்றி, இந்த முறை பாஜக சம பலத்துடன் கூடிய கூட்டணியையே விரும்புவதாகவும், இளைய பங்காளியாக இருக்க விரும்பாது என்றும் கூறப்படுகிறது.
இதற்கிடையில், இந்த சந்திப்பு குறித்து ஆம் ஆத்மி கட்சித் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் கேள்வி எழுப்பியுள்ளார். அகாலி தளம் - பாஜக கூட்டணி சாத்தியமா என்பது குறித்த விவாதங்கள் சூடுபிடித்துள்ள நிலையில், இறுதி முடிவு பாஜகவின் மத்தியத் தலைமையின் கையில்தான் உள்ளது.
Edited by Siva
