1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Ilavarasan
Last Modified: புதன், 1 ஜூலை 2015 (18:42 IST)

மேகதாது விவகாரம்: அன்புமணி கடிதத்திற்கு அமைச்சர் உமாபாரதி பதில்

கர்நாடக அரசு மேகதாதுவில் அணை கட்ட, தமிழகத்தின் ஒப்புதல் இன்றி மத்திய அரசு அனுமதி வழங்காது என்று மத்திய அமைச்சர் உமாபாரதி உறுதியாகத் தெரிவித்துள்ளார்.
 
கர்நாடக அரசு காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது பகுதியில் அணை கட்ட அனுமதிக்க கூடாது என்று வலியுறுத்தி, பாமக இளைஞர் அணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் மத்திய அமைச்சர் உமாபாரதிக்கு கடிதம் எழுதியிருந்தார். அதற்கு பதிலளித்து அமைச்சர் உமாபாரதி கடிதம் அனுப்பியுள்ளதாக பாமக தலைமை நிலையம் செய்திக் குறிப்பினை வெளியிட்டுள்ளது.
 
செய்திக் குறிப்புல், "காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும்; காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணை கட்டும் திட்டத்தைத் தடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி 03.03.2015 அன்று நாடாளுமன்ற மக்களவையில் நீங்கள் எழுப்பிய பிரச்சனை, மற்றும் மார்ச் 18, ஏப்ரல் 29 ஆகிய தேதிகளில் நீங்கள் எனக்கு எழுதிய கடிதம் ஆகியவற்றின் அடிப்படையில் இந்தக் கடிதத்தை எழுதுகிறேன். இந்த விவகாரங்கள் குறித்து எனது அமைச்சக அதிகாரிகளுடன் நான் ஆலோசனை நடத்தினேன். 
 
அதனடிப்படையில், கர்நாடகத்தில் காவிரி ஆற்றில் அணை கட்டாமல் ஓடும் நீரில் மின்சாரம் தயாரிப்பதற்கான சிவசமுத்திரம் நீர்மின்திட்டத்திற்கான விரிவான திட்ட அறிக்கையை மட்டுமே மத்திய நீர்வள ஆணையத்திற்கு கர்நாடக மின்கழகம் அனுப்பியுள்ளது. மாநிலங்களிடையே பாயும் நதியான காவிரியில் எந்தத் திட்டத்தைச் செயல்படுத்துவதாக இருந்தாலும் அதுகுறித்து தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநிலத்தின் கருத்தையும் கேட்க வேண்டும் என்று காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டிருப்பதால், அதன்படி அந்த மாநிலங்களின் கருத்துக்களைக் கேட்டு, அதையும் விரிவான திட்ட அறிக்கையுடன் இணைத்து அனுப்ப வேண்டும்; அப்போது தான் மாநிலங்களுக்கு இடையிலான கோணத்தில் ஆய்வு செய்ய முடியும் என்று கூறி விரிவான திட்ட அறிக்கையை மத்திய அரசு திருப்பி அனுப்பிவிட்டது. 
 
இதைத் தவிர வேறு எந்த திட்டத்திற்குமான விரிவான திட்ட அறிக்கையும் மத்திய நீர்வள ஆணையத்திற்கு வரவில்லை. மேகதாது அணை திட்டத்திற்கான விரிவான திட்ட அறிக்கை மத்திய நீர்வள ஆணையத்திடம் தாக்கல் செய்யப்பட்டால் அதுகுறித்து காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பில் எட்டாவது பிரிவுக்கு உட்பட்டு ஆய்வு செய்யப்படும். மேற்கண்ட இரு திட்டங்களையுமே, நிலுவையிலுள்ள 10/2008 எண் கொண்ட வழக்கில் உச்சநீதிமன்றத்திடம் தகவல் தெரிவிக்காமல் செயல்படுத்த மாட்டோம் என்று கர்நாடக அரசு தெளிவு படுத்தியிருக்கிறது.
 
காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் காவிரி ஆற்றுநீர் ஒழுங்குமுறைக் குழுவை அமைப்பதில் கர்நாடக அரசும், தமிழ்நாடு அரசும் மாறுபட்ட நிலைப்பாட்டை மேற்கொண்டிருக்கின்றன. எனவே, இதுதொடர்பான வழக்கில் 10.05.2013 அன்று உச்சநீதிமன்றம் அளித்த அறிவுறுத்தலின் அடிப்படையில், காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பைச் செயல்படுத்த மத்திய நீர்வளத்துறை செயலாளர் தலைமையில், தமிழக, கர்நாடக மாநில தலைமைச் செயலாளர்கள், மத்திய நீர்வள ஆணையத் தலைவர் ஆகியோரை உறுப்பினர்களாகக் கொண்ட இடைக்காலக் குழு ஒன்று அமைக்கப்பட்டிருக்கிறது. இவ்வாறு மத்திய அமைச்சர் உமாபாரதி அவரது கடிதத்தில் குறிப்பிட்டிருக்கிறார்.
 
காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பின்படி மாநிலங்களிடையே பாயும் நதியான காவிரியில் எந்தத் திட்டத்தைச் செயல்படுத்துவதாக இருந்தாலும் அதுகுறித்து தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநிலத்தின் கருத்தையும் கேட்க வேண்டும் என்பதால், மேகதாது திட்டத்திற்கான விரிவான திட்ட அறிக்கையை கர்நாடக அரசு மத்திய அரசிடம் தாக்கல் செய்தாலும் அது ஏற்கப்படாது. மேகதாது திட்டம் குறித்து தமிழகம் மற்றும் புதுவை அரசிடம் பேச்சு நடத்தி அவற்றின் விவரங்களையும் இணைத்து அனுப்பும்படி கர்நாடக அரசுக்கு மத்திய அரசு ஆணையிடும் என்பது குறிப்பிடத்தக்கது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.