இறப்பதற்கு சில நிமிடத்திற்கு முன் செல்போனில் பேசி அஜித் பவார்.. யாரிடம் பேசினார்?
தேசியவாத காங்கிரஸ் தலைவரும், மகாராஷ்டிரா மாநில முன்னாள் துணை முதல்வருமான அஜித் பவார் விமான விபத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்து குறித்து விசாரணை நடத்தி வரும் காவல்துறையினர், அவர் உயிரிழப்பதற்கு பத்து நிமிடங்களுக்கு முன்னர் செல்போனில் பேசியது குறித்த முக்கிய தகவல்களை வெளியிட்டுள்ளனர்.
அஜித் பவார் தனது செல்போன் மூலம் இறுதியாக அவரது தூரத்து உறவினரான ஸ்ரீஜித் பாட்டீல் என்பவரிடம் பேசியிருப்பது தெரியவந்துள்ளது. அதற்கு சற்று முன்னர், தனது கட்சி தொண்டர் ஒருவரிடமும் அவர் உரையாடியுள்ளார். அந்த உரையாடலின் போது, வரவிருக்கும் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை எந்த அடிப்படையில் தான் தேர்வு செய்தேன் என்பது குறித்து அவர் விளக்கம் அளித்ததாக கூறப்படுகிறது. இந்தத் தகவல்கள் அவரது செல்போன் அழைப்புப் பதிவுகள் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளன.
விமான விபத்து குறித்து உயர்மட்ட விசாரணை நடைபெற்று வரும் நிலையில், இந்த புதிய தகவல்கள் விசாரணையின் போக்கை மாற்றியுள்ளன. அவர் பேசிய நபர்களிடம் விசாரணை நடத்தவும், அந்த உரையாடலில் வேறு ஏதேனும் முக்கிய தகவல்கள் பரிமாறப்பட்டதா என்பதை கண்டறியவும் காவல்துறையினர் திட்டமிட்டுள்ளனர்.
விபத்துக்கு முன்னர் அவர் வேறு யார் யாரிடம் பேசினார் என்பது குறித்த விரிவான பட்டியல் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Edited by Siva