வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Annakannan
Last Updated : செவ்வாய், 15 ஜூலை 2014 (19:42 IST)

இந்தி அலுவல் மொழிச் சுற்றறிக்கை, மாநில அரசுகளுக்குப் பொருந்தாது

சமூக ஊடகங்களில் அலுவலக மொழியான இந்தியையோ அல்லது இந்தி மற்றும் ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளையோ பயன்படுத்துமாறு குறிப்பிடும் சுற்றறிக்கை, 'ஏ' பிரிவு மாநிலங்களில் அமைந்துள்ள மத்திய அரசு அலுவலகங்களுக்கு மட்டுமே பொருந்தும். மாநில அரசுகளுக்கு இது பொருந்தாது என்று இத்தகவலை மத்திய உள்துறை இணை அமைச்சர் கிரண் ரிஜிஜூ தெரிவித்துள்ளார்.
  
அலுவலக மொழிக் கொள்கையை செயல்படுத்துவது குறித்து அலுவலக மொழிப் பிரிவு அவ்வப்போது சுற்றறிக்கைகள் வெளியிடுவது வழக்கமாகும். இவை அலுவலக மொழிகள் சட்டம் 1963 மற்றும் அலுவலக மொழிகள் விதிகள் 1976 -இன் கீழ் வெளியிடப்படுகின்றன. இதை அடிப்படையாகக் கொண்டு கடந்த ஆண்டு 2013 செப்டம்பர் மாதம் 17ஆம் தேதி ஒரு சுற்றறிக்கை வெளியிடப்பட்டது. 
 
இதன் தொடர்ச்சியாக, இந்த ஆண்டு மார்ச் மாதம் 10ஆம் தேதி ஒரு சுற்றறிக்கை வெளியிடப்பட்டது. அதில் அரசு சமூக ஊடகங்களில் அலுவலக மொழியான இந்தியையோ அல்லது இந்தி மற்றும் ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளையோ பயன்படுத்துமாறு குறிப்பிடப்பட்டது. 'ஏ' பிரிவு மாநிலங்களில் அமைந்துள்ள மத்திய அரசின் அமைச்சகங்கள், துறைகள் அதன் கீழ் உள்ள அலுவலகங்கள், பொதுத் துறை நிறுவனங்கள், வங்கிகள் மற்றும் ஏனைய அலுவலகங்களுக்கு இந்தச் சுற்றறிக்கை அனுப்பப்பட்டது. 
 
உத்திரப்பிரதேசம், உத்தர்காண்ட், இமாச்சலப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், சட்டீஸ்கர், பீகார், ஜார்கண்ட், ராஜஸ்தான், அரியானா, தில்லி மற்றும் அந்தமான் நிக்கோபார் தீவுகளின் யூனியன் பிரதேசங்கள் ஆகியவை இந்த 'ஏ' பிரிவு மாநிலங்களில் அடங்கும். இது தொடர்பான சுற்றறிக்கையை மத்திய உள்துறை அமைச்சகம் 2014ஆம் ஆண்டு மே மாதம் 27ஆம் தேதி வெளியிட்டது. 
 
மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்ட சுற்றறிக்கை 'ஏ'பிரிவு மாநிலங்களில் உள்ள மத்திய அரசு அலுவலகங்களுக்கு மட்டுமே பொருந்தும். மாநில அரசுகளுக்கு இது பொருந்தாது.
 
சுற்றறிக்கை வழக்கமான அலுவலக வேலைகளின் ஒரு பகுதியாகத்தான் வெளியிடப்பட்டது. அதனால், இந்தி பேசாத மற்ற மாநில மக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை. 
 
இத்தகவலை மத்திய உள்துறை இணை அமைச்சர் கிரண் ரிஜிஜூ மக்களவையில் சி.என். ஜெயதேவன் எழுப்பிய கேள்விக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் தெரிவித்தார்.