1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Suresh
Last Updated : திங்கள், 27 அக்டோபர் 2014 (11:20 IST)

அத்வானி, சோனியா காந்தி உட்பட 401 எம்.பி.க்கள் சொத்து கணக்கைத் தெரிவிக்கவில்லை: நாடாளுமன்ற செயலகம் தகவல்

பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த 401 எம்.பி.க்கள் தங்களது சொத்து கணக்கைத் தெரிவிக்கவில்லை என்று நாடாளுமன்ற செயலகம் தெரிவித்துள்ளது.
 
நாடாளுமன்ற உறுப்பினராக பதவி ஏற்ற ஒருவர், 90 நாட்களுக்குள் தனது சொத்து, கடன் விவரத்தை தெரிவிக்க வேண்டும் என்று நாடாளுமன்ற சொத்து விதிகள் கூறுகிறன.
 
இந்நிலையில் தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் சொத்து விவரம் குறித்து தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் கீழ் ஒருவர் கேள்வி எழுப்பி இருந்தார். இந்த கேள்விக்கு நாடாளுமன்ற செயலகம் பதில் அளித்திருக்கிறது. அதில் 401 எம்.பி.க்கள் தங்களது சொத்து கணக்கை தெரிவிக்கவில்லை என்று கூறியுள்ளது.
 
சொத்து, கடன் குறித்த விவரங்களைத் தெரிவிக்காதவர்கள் பட்டியலில் முக்கிய கட்சிகளின் எம்.பி.க்களின் எண்ணிக்கை குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
 
அதில், பஜக- 209, காங்கிரஸ் -31, திரிணாமுல் காங்கிரஸ்- 27, பிஜூ ஜனதாதளம்- 18, சிவசேனா- 15, தெலுங்குதேசம்- 14, அதிமுக -9, தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி- 8, ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ்-7, லோக்ஜனசக்தி-6, தேசியவாதகாங்கிரஸ் கட்சி-4, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு - 4, சமாஜ்வாடி-4, அகாலிதளம்-3, ராஸ்டீரிய ஜனதாதளம்-3, ஆம் ஆத்மி கட்சி-3, ஐக்கிய ஜனதாதளம்-2, அப்னாதளம்-2 என்று கூறப்படுகிறது.
 
சொத்து கணக்கு தெரிவிக்காத தலைவர்கள் பட்டியலில் பாஜக  மூத்த தலைவர் அத்வானி, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, துணைத்தலைவர் ராகுல் காந்தி, சமாஜ்வாடி கட்சி தலைவர் முலாயம் சிங் யாதவ், முலாயம் சிங் யாதவின் மருமகள் டிம்பிள் யாதவ், மதச்சார்பற்ற ஜனதாதளம் தலைவர் தேவே கவுடா, நடிகை ஹேமமாலினி, பாரதீய ஜனதா மூத்த தலைவர் ராஜீவ் பிரதாப் ரூடி, தேசியவாத காங்கிரஸ் மூத்த தலைவர் தாரிக் அன்வர், நடிகர் வினோத் கன்னா, பாமக மூத்த தலைவர் அன்புமணி ராமதாஸ் உள்ளிட்டவர்கள் இடம் பிடித்துள்ளனர்.
 
மத்திய அமைச்சர் ராஜ்நாத்சிங், சுஷ்மா சுவராஜ், உமாபாரதி, நிதின் கட்காரி, ஹர்சவர்தன், ராதாமோகன் சிங், ஆனந்த் கீதே, அனந்த குமார், ராம்விலாஸ் பஸ்வான், உபேந்திர குஷ்வாகா, கிரண் ரிஜ்ஜூ, கல்ராஜ் மிஸ்ரா உள்ளிட்டவர்கள் தங்கள் சொத்து விவரத்தை தெரிவிக்கவில்லை என்று கூறப்படுகிறது.
 
சொத்து கணக்கு தெரிவிக்காதவர்கள் மீது சொத்துக்கள், கடன்கள் அறிவித்தல் விதிகள் 2004, பிரிவுகள் 5, 6, மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் பிரிவு 75 (ஏ) ஆகியவற்றின்படி நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக நாடாளுமன்ற செயலகம் தெரிவித்துள்ளது.