1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By K.N.Vadivel
Last Updated : புதன், 27 மே 2015 (05:15 IST)

துபாய்க்கு பறந்து செல்கிறார் நடிகர் சல்மான் கான்

துபாயில் நடைபெற உள்ள, இந்திய - அரபு பாலிவுட் சினிமா விருது வழங்கும் விழாவில் கலந்து கொள்ள நடிகர் சல்மான் கானுக்கு மும்பை நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
 
பிரபல இந்தி நடிகர் சல்மான்கான் கடந்த 2002 ஆம் ஆண்டு, மும்பையில் மது அருந்தி, கார் ஓட்டி சென்ற போது, சாலையில் படுத்து உறங்கிய 4 பேர் மீது காரை ஏற்றினார். இதில் ஒருவர் உயிரிழந்தார். மேலும் 4 பேர் படுகாயம் அடைந்தனர். 
 
இது குறித்து மும்பை காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த வழக்கு விசாரணை மும்பை நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கு விசாரணை  முடிவில், நடிகர் சல்மான்கானுக்கு 5 ஆண்டுகள் ஜெயில் தண்டனை விதித்து கடந்த 6 ஆம் தேதி மும்பை செசன்சு கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு அளித்தது.
 
இந்நிலையில், கடந்த 8 ஆம் தேதி சல்மான்கானுக்கு கீழ்கோர்ட்டு விதித்த தண்டனையை மும்பை உயர் நீதிமன்றம் நிறுத்தி வைத்தது. மேலும், கானுக்கு நிபந்தனைகளுடன் கூடிய ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.
 
இந்நிலையில், மே 29 ஆம் தேதி துபாயில், இந்திய - அரபு பாலிவுட் சினிமா விருது வழங்கும் விழா நடைபெறுகிறது. இதில் கலந்து கொள்ள நடிகர் சல்மான் கான் முடிவு செய்தார். அதனால், நீதி மன்றத்தை நாடினார். 
 
அந்த வகையில் மே 27 ஆம் தேதி முதல் மே 30 ஆம் தேதி வரை துபாய் சென்றுவர அனுமதி அளிக்க கோரி மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஷாலினி பன்சால்கர், நடிகர் சல்மான்கானுக்கு அனுமதி வழங்கினார். 
 
அதே வேளையில், நடிகர் சல்மான் கான், துபாய் நாட்டுக்கு செல்லும் போது, ரூ.2 லட்சம் பிணைத் தொகையை கட்ட வேண்டும் என்றும், அங்கிருந்து புறப்படும் போதும் அங்குள்ள இந்திய தூதரகத்திற்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்றும், துபாய் சென்று வரும் முழு விவரம், விமான நேரம், விமானத்தின் எண், துபாயில் தங்கி இருக்கும் இடத்தின் முகவரி, செல்போன் எண் ஆகியவற்றை விசாரணை குழுவினரிடம் அளிக்கவேண்டும் என்றும் மேலும் சில நிபந்தனைகளை விதித்தார். 
 
இதனை ஏற்றுக் கொண்ட நடிகர் சல்மான் மகிழ்ச்சியோடு துபாய்க்கு விமானத்தில் செல்கிறார்.