செவ்வாய், 22 ஏப்ரல் 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 15 ஏப்ரல் 2025 (12:49 IST)

ராஜேந்திர பாலாஜிக்கு எதிரான வழக்கு: ஆளுநர் எடுத்த நடவடிக்கையால் அதிமுகவில் பரபரப்பு..!

விருதுநகர் மாவட்டம் சாத்தூரைச் சேர்ந்த எஸ். ரவீந்திரனின் சகோதரி மகனுக்கு, ஆவின் கிளை மேலாளராக நியமனம் செய்வதாக வாக்குறுதி அளித்து ரூ.30 லட்சம் பெற்றுக்கொண்டு பண மோசடி செய்ததாக, முன்னாள் பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மற்றும் விஜய் நல்லதம்பி, மாரியப்பன் ஆகியோருக்கு எதிராக 2021-ஆம் ஆண்டு வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
 
இந்த வழக்கு குறித்து தொடர்ந்து தலைமறைவாக இருந்த ராஜேந்திர பாலாஜி, பின்னர் கர்நாடகத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அதன் பின்னர், நீதிமன்ற உத்தரவு அடிப்படையில் பிணையில் வெளியே வந்தார்.
 
மேலும் விசாரணையில், ஆவினில் வேலை வாங்கித் தருவதாக கூறி சுமார் 33 பேரிடம் ரூ.3 கோடி வரை மோசடி செய்திருப்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது. இந்த வழக்கில் குற்றப்பத்திரிகை, விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் கடந்த ஜனவரி 9-ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்டது.
 
சமீபத்தில் இந்த வழக்கு தொடர்பான மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், இதன் விசாரணையை சிபிஐக்கு மாற்றி உத்தரவிட்டது.
 
தற்போது, இந்த வழக்கில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு எதிராக சட்டப்படி நடவடிக்கை எடுக்க தமிழக ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளார். இதையடுத்து, வரவிருக்கும் நாட்களில் அவருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
 
 
Edited by Mahendran