செவ்வாய், 23 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: வியாழன், 31 டிசம்பர் 2015 (08:50 IST)

ஊழல்வாதிகளை காப்பாற்ற அருண் ஜேட்லி எழுதிய கடிதங்கள் - ஆம் ஆத்மி வெளியீடு

புதுடெல்லி கிரிக்கெட் சங்க முறைகேடுகள் தொடர்பாக நடைபெற்ற ஊழல்களை மறைக்க நிதியமைச்சர் அருண் ஜேட்லி எழுதிய கடிதங்களை ஆம் ஆத்மி கட்சி வெளியிட்டது.
 

 
மாநிலங்களவையின் எதிர்க்கட்சித் தலைவராக அருண் ஜேட்லி இருந்தபோது, புதுடெல்லி கிரிக்கெட் சங்க ஊழல் புகார்கள் மீதான விசாரணைகளை முடித்துக் கொள்ளுமாறு, தில்லி காவல்துறை ஆணையர் மற்றும் சிறப்பு காவல்துறை ஆணையர் ஆகியோருக்கு கடிதங்களை எழுதியுள்ளார்.
 
அந்த கடிதங்களையே ஆம் ஆத்மி வெளியிட்டுள்ளது. அருண் ஜேட்லி 2013ம் ஆண்டு வரை டெல்லி கிரிக்கெட் சங்கத்தின் தலைவராக இருந்தார். இதனிடையே அவர் 2011-ஆம் ஆண்டு அக்டோபர் 27-ஆம் தேதி, தில்லி காவல்துறை ஆணையர் பி.கே.குப்தாவுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
 
இந்த கடிதத்தை தில்லியில் செய்தியாளர்களிடம் காட்டிய ஆம் ஆத்மி கட்சியினர், அதில், ’டெல்லி கிரிக்கெட் சங்கம் எந்த வித முறைகேடுகளிலும் ஈடுபடவில்லை; எனவே விசாரணையை முடித்துக் கொள்ளுங்கள்’ என்று அறிவுறுத்தி இருப்பதை சுட்டிக்காட்டினர்.
 
அதே போல, தில்லி சிறப்பு காவல்துறை ஆணையராக இருந்த ரஞ்ஜித் நாராயணுக்கு 2012-ஆம் ஆண்டு மே 5 எழுதிய மற்றொரு கடிதத்தில், “தில்லி கிரிக்கெட் சங்க ஊழல் தொடர்பான புகார்கள் நிரூபிக்கப்படவில்லை; மேலும் எந்த வித முறைகேடும் நடந்ததாகத் தெரியவில்லை. இந்நிலையில் தொடர்ந்து கேள்வி கேட்டு நச்சரிப்பதாக தில்லி கிரிக் கெட் சங்க நிர்வாகிகள் சங்கடப்படுகின்றனர்” என்று அருண் ஜேட்லி கூறியிருப்பதையும் ஆம் ஆத்மி கட்சியினர் அம்பலப்படுத்தி உள்ளனர்.
 
இக்கடிதங்களை வெளியிட்டுப் பேசிய ஆம் ஆத்மி கட்சியினர், ஜேட்லி எழுதிய கடிதங்கள் மூலம் அவர் தில்லி கிரிக்கெட் சங்க ஊழல் விவகாரத்தில் தலையிட்டது ஆவணப் பூர்வமாக நிரூபிக்கப்பட்டு உள்ளது என்றும் தெரிவித்தனர்.