1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. தேசியச் செய்திகள்
Written By வீரமணி பன்னீர்செல்வம்
Last Updated : திங்கள், 28 ஏப்ரல் 2014 (10:10 IST)

89 தொகுதிகளில் 7வது கட்டத் தேர்தல்: மோடி, சோனியா போட்டியிடும் தொகுதிகளில் இன்று பிரச்சாரம் ஓய்கிறது

நாடாளுமன்றத்துக்கு 7வது கட்டமாக நரேந்திர மோடி, சோனியா காந்தி ஆகியோர் போட்டியிடும் தொகுதிகள் உள்பட 89 தொகுதிகளில் வருகிற 30 ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான பிரச்சாரம் இன்று மாலையுடன் ஓய்கிறது.
543 உறுப்பினர்களை கொண்ட நாடாளுமன்றத்துக்கு ஏப்ரல் 7 ஆம் தேதி தொடங்கி மே 12 ஆம் தேதி வரை 9 கட்டங்களாக தேர்தல் நடத்த முடிவு செய்யப்பட்டது. இதுவரை 6 கட்டமாக பல்வேறு மாநிலங்களில் உள்ள 348 தொகுதிகளில் தேர்தல் நடந்து முடிந்துள்ளது.
 
7வது கட்டமாக வருகிற 30 ஆம் தேதி (புதன்கிழமை) 7 மாநிலங்கள் மற்றும் இரு யூனியன் பிரதேசங்களில் உள்ள 89 தொகுதிகளில் தேர்தல் நடைபெறுகிறது. அன்று எந்தெந்த மாநிலங்களில் எத்தனை தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது என்ற விவரம் வருமாறு:-
 
ஆந்திரா - 17, குஜராத்-26, பஞ்சாப்-13, உத்தரபிரதேசம்-14, மேற்கு வங்காளம்-9, பீகார்-7, காஷ்மீர்-1, யூனியன் பிரதேசங்களான தத்ரா நகர் ஹவேலி, டாமன் மற்றும் டையூ தலா ஒரு தொகுதிகள். இந்த 89 தொகுதிகளிலும் மொத்தம் 1,295 வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள்.

ஆந்திராவில் 30 ஆம் தேதி தேர்தல் நடைபெறும் 17 நாடாளுமன்ற தொகுதிகளும் புதிதாக உருவாக் கப்பட்டுள்ள மாநிலமான தெலுங்கானாபகுதியில் அமைந்து உள்ளன. (ஆந்திராவில் நாடாளுமன்ற தேர்தலுடன் சட்டசபை தேர்தலும் நடைபெறுவதால், இந்த 17 தொகுதிகளில் அடங்கியுள்ள சட்டசபை தொகுதிகளிலும் 30 ஆம் தேதி வாக்குப்பதிவு நடக்கிறது.)
 
குஜராத் மாநிலத்தில் மொத்தம் உள்ள 26 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக 30 ஆம் தேதி ஓட்டுப்பதிவு நடைபெறுகிறது.
 
30 ஆம் தேதி தேர்தலை சந்திக்கும் தலைவர்களில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, குஜராத் முதலமைச்சரும், பாரதீய ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள் ஆவார்கள். சோனியா காந்தி போட்டியிடும் உத்தரபிரதேச மாநிலம் ரேபரேலி தொகுதியிலும், நரேந்திர மோடி போட்டியிடும் குஜராத் மாநிலம் வதோதரா தொகுதியிலும் 30 ஆம் தேதி ஓட்டுப்பதிவு நடக்கிறது. (நரேந்திர மோடி, உத்தர பிரதேச மாநிலம் வாரணாசி நாடாளுமன்ற தொகுதியிலும் போட்டியிடுகிறார்.)
 
மத்திய அமைச்சர் பரூக் அப்துல்லா (ஸ்ரீநகர்), பாரதீய ஜனதா தலைவர் ராஜ்நாத்சிங் (லக்னோ), அக்கட்சியின் மூத்த தலைவர்கள் அருண் ஜெட்லி (அமிர்தசரஸ்), முரளி மனோகர் ஜோஷி (கான்பூர்), உமா பாரதி (ஜான்சி) ஆகியோரும் 30 ஆம் தேதி தேர்தலை சந்திக்கிறார்கள்.
 
30 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும் 89 தொகுதிகளிலும் அனல் பறக்கும் பிரச்சாரம் நடைபெற்று வருகிறது. அங்கு இன்று (திங்கட்கிழமை) மாலை 6 மணியுடன் பிரச்சாரம் ஓய்கிறது.
 
30 ஆம் தேதி காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும். இதற்கான இறுதிகட்ட ஏற்பாடுகளை தேர்தல் கமிஷன் மும்முரமாக செய்து வருகிறது.