1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By வீரமணி பன்னீர்செல்வம்
Last Modified: புதன், 27 மே 2015 (20:24 IST)

6 வயது சிறுமியின் 2 சிறுநீரகங்கள் அகற்றம்: எய்ம்ஸ் மருத்துவமனை டாக்டர் மீது விசாரணைக்கு உத்தரவு

உத்தரப் பிரதேச மாநிலம், பரேலியைச் சேர்ந்த பவன் குமார் என்பவர் தனது 6 வயது மகள் 2 சிறுநீரகங்களை டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை டாகடர் அகற்றி விட்டதாக புகார் கூறியுள்ளார்.
 

 
இது குறித்து அவர் தனது புகார் மனுவில் தெரிவித்திருப்பதாவது:-
 
எனது 6 வயது மகளுக்கு சிறுநீரகத்தில் பிரச்சனை ஏற்பட்டதையடுத்து, சிகிச்சைக்காக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் கடந்த ஆண்டு சேர்த்தேன். அங்கு மருத்துவ பரிசோதனையில், எனது மகளின் இடது சிறுநீரகத்தில் பிரச்சனை இருப்பதும், வலது சிறுநீரகம் நல்ல நிலையில் இருப்பதும் கண்டறியப்பட்டது.
 
எனது மகளுக்கு சிகிச்சை அளித்து வந்த மூத்த மருத்துவர், அவளுக்கு அறுவை சிகிச்சை செய்து இடது சிறுநீரகத்தை அகற்ற வேண்டும் என கூறினார். அதையடுத்து, கடந்த மாதம் 14 ஆம் தேதி அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.
 
இந்நிலையில், சில தினங்களுக்கு முன்பு அவளுக்கு கடுமையான வலி ஏற்பட்டது. அதையடுத்து, சிடி ஸ்கேன் எடுக்கப்பட்டது. அதில், இரு சிறுநீரகங்களும் இல்லாதது கண்டுபிடிக்கப்பட்டது.
 
அதையடுத்து, அவளுக்கு அறுவை சிகிச்சை செய்த மருத்துவரிடம் சென்று கேட்டேன். அவர் உரிய முறையில் பதிலளிக்கவில்லை. இதுதொடர்பாக, மருத்துவமனை நிர்வாகத்திடம் முறையிட முயன்றேன். ஆனால் அது முடியவில்லை என்று பவன் குமார் கூறியுள்ளார்.
 
தனது மகள் கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் டயாலிசிஸ் சிகிச்சையில் இருந்து வருவதாக பவன் குமார் கூறினார். இந்த குற்றசாட்டை தொடர்ந்து எய்ம்ஸ்  மருத்துவமனை இது குறித்து விசாரணை நடத்த மூத்த டாக்டர்களை கொண்ட ஒரு குழுவை அமைத்துள்ளது. இந்த குழு கடந்த 20 ஆம் தேதி கூடி ஆலோசனை நடத்தியது. இந்த குழு மீண்டும் இந்த வாரம் கூடுகிறது.
 
6 வயது சிறுமியின் இரண்டு சிறுநீரகங்களும் அகற்றப்பட்ட விவகாரத்தில் அறுவை சிகிச்சை செய்த எய்ம்ஸ் மருத்துவரிடம் உயர்மட்ட விசாரணை நடத்த சுகாதாரத் துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
 
இது குறித்து தகவல் அறிந்த மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஜே.பி.நட்டா, தற்போது ஜெனிவாவில் உள்ளார். அங்கிருந்து அவர் எய்ம்ஸ் மருத்துவமனை இயக்குநரை தொடர்பு கொண்டு, உண்மை விவரங்களை கேட்டறிந்தார்.