2ஜி ஸ்பெக்ட்ரம்: குற்றவாளிக்கு சாதகமாக செயல்பட்ட சி.பி.ஐ வக்கீல் அதிரடி நீக்கம்

Webdunia|
FILE
2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கு உச்ச நீதிமன்ற கண்காணிப்பில் நடந்து வருகிறது.இந்நிலையில், இந்த கண்காணிப்பையும் மீறி, சி.பி.ஐ. வக்கீல், குற்றம் சாற்றப்பட்டவருக்கு சாதகமாக நடந்து கொண்டிருப்பது தெரிய வந்துள்ளதை அடுத்து அவர் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார்.

2ஜி வழக்கில் குற்றம் சாற்றப்பட்டவர்களில் யுனிடெக் நிறுவன நிர்வாக இயக்குனர் சஞ்சய் சந்திராவும் ஒருவர். சந்திரா பயனடையும் வகையில் செயல்பட்டதாகத்தான் ஆ.ராசா மற்றும் மத்திய அரசு உயர் அதிகாரிகளுக்கு எதிராக குற்றம் சாற்றப்பட்டுள்ளது.அத்தகைய சஞ்சய் சந்திராவும், சி.பி.ஐ. வக்கீல் ஏ.கே.சிங்கும் ரகசிய உரையாடல் நடத்தியதாக தெரிய வந்துள்ளது. இருவரின் உரையாடல் அடங்கிய கேசட், சி.பி.ஐ.யிடம் தற்போது சிக்கி உள்ளது.
கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் பதிவு செய்யப்பட்ட அந்த கேசட் 17 நிமிடங்கள் ஓடுகிறது. அதில், வழக்கு பற்றி பல்வேறு வியூகங்களை சஞ்சய் சந்திராவுக்கு ஏ.கே.சிங் அதில் கற்று கொடுத்துள்ளார் எனபது அமபலமாகியுள்ளது. முக்கிய அரசுத்தரப்பு சாட்சி எப்படி சாட்சி அளிப்பார்? தனது தரப்பு வாதத்தை சஞ்சய் சந்திரா எப்படி நடத்த வேண்டும்? சி.பி.ஐ.யின் வியூகம் ஆகியவற்றை அவர் சொல்லி கொடுத்துள்ளார்.
இதன்படி ஏ.கே.சிங், சஞ்சய் சந்திரா ஆகியோர் மீது சி.பி.ஐ. புகாரை பதிவு செய்துள்ளது. இருவரிடமும் நேற்று சி.பி.ஐ. தலைமையகத்தில் வைத்து சி.பி.ஐ. விசாரணை நடைபெற்றது.

இதைத்தொடர்ந்து, இந்த வழக்கின் சி.பி.ஐ. வக்கீல் பொறுப்பில் இருந்து ஏ.கே.சிங் நேற்று அதிரடியாக நீக்கப்பட்டார். இந்த விவகாரம் குறித்து உச்ச நீதிமன்றம், ஊழல் கண்காணிப்பு துறை, மத்திய சட்ட அமைச்சகம் ஆகியவற்றுக்கு சி.பி.ஐ. இந்த தகவலை தெரிவித்துள்ளது.


இதில் மேலும் படிக்கவும் :