1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: செவ்வாய், 19 ஏப்ரல் 2016 (12:24 IST)

16 வயது சிறுமியை 113 பேர் பாலியல் பலாத்காரம்; 2 ஆண்டுகள் நடந்த கொடூரம்

மேற்குவங்கத்தை சேர்ந்த 16 வயது சிறுமி ஒருவரை, கடந்த 2 ஆண்டுகளாக போலீசார் உள்பட 113 பேர் பாலியல் வல்லுறவுக் கொடுமைக்கு உள்ளாக்கியது தெரிய வந்துள்ளது.
 

 
மேற்குவங்க மாநிலத்தில் உள்ள சிலிகுரியை சேர்ந்தவர் ரீமா (பெயர் மாற்றப்பட்டுள்ளது). வயது 16. ரீமாவின் தந்தை, அவர்களை விட்டு விட்டு சென்ற நிலையில், அதன் காரணமாகவே ரீமாவின் தாயாரும் மனநலப் பாதிப்புக்கு ஆளாகியுள்ளார். இதனால் ரீமாவின்பாட்டி டீக்கடை நடத்தி குடும்பத்தை காப்பாற்றி வந்துள்ளார்.
 
இந்நிலையில், அவரது டீக்கடைக்கு சிகரெட் வாங்க வந்த நேபாளத்தை சேர்ந்த ரோஹித் பந்தாரி (35) என்பவர் ரீமாவுக்கு மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் உள்ள அழகு நிலையத்தில் வேலை வாங்கித் தருவதாக அழைத்துச் சென்றுள்ளார்.
 
அங்கு அவரை பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கிய பந்தாரி, ரீமாவுக்கு போதைப் பொருள் கொடுத்து, விபச்சாரத்தில் தள்ளியுள்ளார். ரீமா கர்ப்பமான நிலையில், கட்டாயப்படுத்தி கருவை கலைத்துள்ளார்.
 
பந்தாரியின் கூட்டாளியான ஸ்விக்ருதி காரேல் (26) ரீமாவை ஹைதராபாத், அகமதாபாத் மற்றும் போபாலுக்கு அழைத்துச் சென்று விபச்சாரத்தில் ஈடுபடுத்தியுள்ளார். மீண்டும் ரீமாவை புனேவுக்கு அழைத்து வந்தவர்கள் இங்கு ஒரு ஃபிளாட்டில் அடைத்து வைத்துள்ளனர்.
 
அதே ஃபிளாட்டில் ரீமாவை போலவே ஏமாற்றி அழைத்து வரப்பட்டு, சித்ரவதைக்கு ஆளாக்கப்பட்ட தில்லியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவரும் அடைத்து வைக்கப்பட்டுள்ளார்.
 
இந்நிலையிலேயே சிறுமி ரீமாவும், 24 வயது இளம்பெண்ணும் அங்கிருந்து தப்பி தில்லிக்கு சென்றனர். தில்லியில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இளம் பெண்ணைப் பார்த்த மருத்துவர்கள் போலீசாருக்கு தகவல் அளித்தனர்.
 
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த தில்லி போலீசார், வழக்கை புனே காவல் நிலையத்திற்கு மாற்றினர். இதையடுத்து புனே போலீசார் பந்தாரி, ஸ்விக்ருதி உள்பட 5 பேரை தற்போது கைது செய்துள்ளனர்.
 
கடந்த 2 ஆண்டுகளில் தன்னை போலீசார் உள்பட 113 பேர் பாலியல் வல்லுறவுக் கொடுமைக்கு உள்ளாக்கியதாக அவர் தனது புகார் மனுவில் தெரிவித்துள்ளார்.
 
இதையடுத்து போலீசார் 113 பேர் மீது தற்போது வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அதில் காவல்துறையை சேர்ந்த ஒருவரும் அடக்கம் என தெரியவந்துள்ளது.