கராச்சியில் இந்திய ஜிஹாதிகளுக்கு ஐ.எஸ்.ஐ. பயிற்சி!

Webdunia|
இந்தியாவிற்குள் மும்பை பாணியில் மற்றுமொரு தாக்குதலை நடத்துவதற்காக இந்தியாவைச் சேர்ந்த ஜிஹாதிகளுக்கு பாகிஸ்தானின் கடற்கரை நகரமான கராச்சியில் பாகிஸ்தான் அயல் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ. பயிற்சி அளித்து வருவதாக அமெரிக்காவின் புலனாய்வு அமைப்பு நடத்திவரும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

அமெரிக்க புலனாய்வு அமைப்பான எஃப்.பி.ஐ.யின் பிடியில் சிக்கியுள்ள டேவிட் கோல்மேன் ஹெட்லி, ஹைதராபாத்தில் பிடிபட்ட மொஹம்மது அம்ஜத் கிவாஜா ஆகியோரிடம் நடத்திய விசாரணையில், இந்தியாவிற்குள் மேலும் பல தாக்குதல் நடத்தும் ‘திட்’ங்களுக்காக இந்தியாவிலிருந்து அனுப்பு வைக்கப்பட்ட ஜிஹாதிகளுக்கு ஐ.எஸ்.ஐ. தீவிர பயிற்சி அளித்துவருவதாகத் தெரிவித்துள்ளனர்.
இந்தப் பயிற்சித் திட்டத்தில் ஐ.எஸ்.ஐ.யுடன், மும்பை மீது நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலிற்குக் காரணமான லஸ்கர் இ தயீபா இயக்கமும் இணைந்துள்ளதென அவர்களிடம் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது.

லஸ்கர் இ தயீபாவுடன் இணைந்துகொண்டு, இந்தியாவில் தாக்குதல் நடத்துவதற்கான இலக்குகளை கண்காணித்து தகவலளித்த டேவிட் கோல்மேன் ஹெட்லி கடந்த ஆண்டு அக்டோபரில் எஃபி.பி.ஐ.யால் கைது செய்யப்பட்டார். கர்நாடக்கத்திலும் இந்தியாவின் மற்ற பல இடங்களிலும் நடந்த பயங்கரவாதத் தாக்குதல்களில் தொடர்புடையவர் என்ற குற்றச்சாற்றின் பேரில் கடந்த மாதம் 18ஆம் தேதி மொஹம்மது அம்ஜத் க்வாஜா ஹைதராபாத்தில் கைது செய்யப்பட்டார்.
‘கராச்சி திட்டம்’ என்றழைக்கப்படும் இந்தியா ஜிஹாதிகளை பயிற்றுவிக்கும் திட்டத்தை லஸ்கரும், ஐ.எஸ்.ஐ.யும் இணைந்து மேற்கொண்டுவருவதை உறுதிப்படுத்திய ஹெட்லி, தான் கராச்சியிலிந்துதான் இரண்டு முறையும் - முதல் தடவையாக 2006ஆம் ஆண்டு முடிவிலும், 2008ஆம் ஆண்டு ஏப்ரலிலும் மும்பை வந்ததாகத் தெரிவித்துள்ளார்.
ஹெட்லியின் மின்னஞ்சல் கடிதப் பரிமாற்றங்களை கூகுள் நிறுவனத்தின் அனுமதியுடன் ஆய்வு செய்த இந்தியாவின் தேசப் புலனாய்வு முகமை பல தகவல்களைத் திரட்டியுள்ளது. இது மட்டுமின்றி, க்வாஜாவிடம் நடத்திய விசாரணையில், ஹைதராபாத்திலுள்ள இராணுவ இலக்கின் மீது தாக்குதல் நடத்தும் திட்டம் இருந்ததும் தெரியவந்துள்ளது.
இந்தியாவில் நடந்த பல்வேறு தாக்குதல்களில் தொடர்புடைய அமிர் ராஜா கான், ரியாஸ் பாட்கல் ஆகியோரை கராச்சியில் வைத்துத் தான் சந்தித்துப் பேசிய விவரங்களையும் க்வாஜா இந்திய புலனாய்வாளர்களிடம் தெரிவித்துள்ளான்.

ஹைதராபாத்திலுள்ள சிறப்புப் படையின் அலுவலகம் மீது 2005ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் நடத்தப்பட்ட தாக்குதலில் தனக்கு உள்ள தொடர்பை க்வாஜா ஒப்புக் கொ்ண்டாலும், பல பேரின் உயிரைப் பறித்த மெக்கா மசூதி, கோகுல் சாட் தாக்குதல்களில் தனக்குள்ளத் தொடர்பை மறைத்து வருவதாகக் கூறப்படுகிறது.
ஐ.எஸ்.ஐ., லஸ்கர் ஆகியவற்றின் கராச்சி நடவடிக்கைகள் மட்டுமின்றி, வங்கதேசத்திலிருந்து செயல்பட்டுவரும் ஹர்க்கத் உல் ஜிஹாதி ஹிந்த் என்ற அமைப்பின் நடவடிக்கைகள் குறித்தும், பாகிஸ்தானின் மன்ஷேரா, முறிட்கி ஆகிய இடங்களில் செயல்பட்டுவரும் லஸ்கர் இயக்கத்தின் தலைவர்களுடன் அது கொண்டுள்ள தொடர்பு குறித்தான விவரங்களையும் இந்திய புலனாய்வாளர்களிடம் க்வாஜா தெரிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இதற்கிடையே மங்களூருக்கு அருகிலுள்ள பாட்கல் என்ற நகரில் நடத்தப்பட்ட தாக்குதல்கள் குறித்து கர்நாடக மாநில காவல் துறையினரும் க்வாஜாவிடம் விசாரிக்க வருகின்றனர். சமூக விரோதியாக இருந்து ஜிஹாதியாக மாறிய அமிர் ராஜா கான், இந்தியாவின் ஜிஹாதிகள் பாகிஸ்தான் சென்று பயிற்சி பெற உதவியது குறித்தும் க்வாஜாவிடம் விவரம் இருக்கும் என்ற கர்நாடக காவல் துறையினர் கருதுகின்றனர்.
இந்தப் பின்னணியில்தான், மும்பை போன்ற தாக்குதல்கள் மீண்டும் இந்தியாவில் நடத்த சதித்திட்டம் தீட்டப்படுவதாக பிரதமர் மன்மோகன் சிங் பேசியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


இதில் மேலும் படிக்கவும் :