மும்பை போன்ற தாக்குதல் மீண்டும் நடைபெறாது: பிரதமர் உறுதி

Webdunia| Last Updated: சனி, 22 பிப்ரவரி 2014 (22:34 IST)
மும்பை மீதான பயங்கரவாதத் தாக்குதலைப் போன்றதொரு தாக்குதல் மீண்டும் நடைபெறாமல் தடுக்க, தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என பிரதமர் மன்மோகன் சிங் உறுதிபடத் தெரிவித்துள்ளார்.

தலைநகர் புதுடெல்லியில் தனியார் நாளிதழ் சார்பில் இன்று மாலை நடத்தப்பட்ட விருது வழங்கும் விழாவில் பங்கேற்றுப் பேசிய போது இதனைத் தெரிவித்த பிரதமர், மும்பை தாக்குதல் போன்றதொரு பயங்கரவாதத் தாக்குதலை எந்த ஒரு நாடும் பொறுத்துக் கொள்ளாது என்றார்.

இத்தாக்குதலின் போது மும்பை மக்கள் சந்தித்த வேதனைகளையும், வலியையும் நான் அறிந்துள்ளேன். அந்த வகையில் இதுபோன்றதொரு பயங்கரவாதத் தாக்குதல் மீண்டும் நடைபெறாத வகையில் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றார்.
அதேவேளையில், பாகிஸ்தான் தனது மண்ணில் செயல்படும் பயங்கரவாத முகாம்களை மூடுவதுடன், மும்பை மீதான தாக்குதல் போன்றதொரு தாக்குதல் மீண்டும் ஏற்படாமல் தடுக்க முன்வர வேண்டும் என்று வலியுறுத்தினார்.

2009 சவாலான ஆண்டு: சர்வதேச அளவில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளதால், நமது பொருளாதார வலிமையை சோதிக்கும் வகையில் நடப்பாண்டு (2009-10) இருக்கும் எனத் தெரிவித்த பிரதமர், பொருளாதாரப் பின்னடைவு ஏற்படுவதை தடுப்பதற்கான நடவடிக்கைகள் அனைத்தும் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றார்.
எனினும், நிர்ணயிக்கப்பட்ட பொருளாதார வளர்ச்சியை எட்டுவதற்குத் தேவையான அனைத்து முயற்சிகளும் எடுக்கப்படும்.

சத்யம் நிறுவன ஊழல் இந்திய நிறுவன வரலாற்றில் ஏற்பட்டுள்ள கறை எனத் தெரிவித்த பிரதமர், இனி வரும் காலங்களில் நிறுவனங்கள் தங்கள் கணக்கு வழக்குகளை கூடுதல் கவனத்துடன் பராமரிக்க வேண்டும் என்றார்.
சத்யம் நிறுவன சரிவு காரணமாக ஏற்பட்ட பின்னடைவில் இருந்து நாம் விரைவில் மீள முடியும். அதிலிருந்து நாம் விரைவில் மீண்டும் விடுவோம் எனப் பிரதமர் உறுதிபடத் தெரிவித்தார்.


இதில் மேலும் படிக்கவும் :