மும்பை குண்டுவெடிப்பு வழக்கில் 3 பேர் குற்றவாளிகள்: பொடா நீதிமன்றம் தீர்ப்பு

மும்பை:| Webdunia| Last Modified திங்கள், 27 ஜூலை 2009 (16:24 IST)
மும்பையில் நடந்த இரட்டை குண்டுவெடிப்பு வழக்கில் 3 பேர் குற்றவாளிகள் என மும்பை பொடா நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இவர்களுக்கான தண்டனை வரும் 4ம் தேதி அறிவிக்கப்படுகிறது.

கடந்த 2003ம் ஆண்டு ஆகஸ்ட் 25ம் தேதி மும்பையில் கேட்வே ஆப் இந்தியா, ஜவேரி பஜார் ஆகிய இரு இடங்களில் பயங்கர குண்டு வெடிப்பு சம்பவங்கள் நிகழ்ந்தன. இதில் 52 பேர் பலியாகினர்; 184 பேர் படுகாயம் அடைந்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக 16 வயது இளம்பெண் உள்பட 6 பேர் கைது செய்யப்பட்டனர். ஹனீப் சையத் என்ற ஆட்டோ டிரைவர் (46), அவரது மனைவி பாமீடா 43), அஸ்ரத் அன்சாரி (32), அன்சாரி மற்றும் ஹசன் ஆகியோர் இதர குற்றவாளிகளாக இருந்தனர்.
இதில் தொடர்புடைய மற்றொரு முக்கிய குற்றவாளியான நசீர் அகமது என்பவன் 2003ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 12ம் தேதி ோலீசாருடன் நடந்த துப்பாக்கிச் சண்டையில் சுட்டுக்கொல்லப்பட்டான்.

இந்த வழக்கு கடந்த 6 ஆண்டுகளாக மும்பை பொடா நீதிமன்றத்தில் நடந்து வந்தது. 103 சாட்சிகள் விசாரிக்கப்பட்டனர். இதில், 4வது குற்றவாளியாக சேர்க்கப்பட்டிருந்தவர் அப்ரூவராக மாறினார்.
வழக்கு விசாரணையின் போது, 16 வயது இளம்பெண் விடுவிக்கப்பட்டார். பொடா மறுஆய்வுக் குழு நடத்திய விசாரணையின் பேரில், அன்சாரி, ஹசன் ஆகியோரும் வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டனர்.

இந்த வழக்கில் இன்று தீர்ப்பளிக்கப்பட்டது. இதில், ஹனீப் சையத், பாமீடா மற்றும் அஸ்ரத் அன்சாரி ஆகியோர் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டனர். இவர்களுக்கான தண்டனை விபரம் ஆகஸ்டு 4ம் தேதி அறிவிக்கப்படுகிறது.
இந்த குண்டுவெடிப்பு தொடர்பான வழக்கு விசாரணையில், குஜராத் கலவரத்தில் முஸ்லிம்கள் பாதிக்கப்பட்டதற்கு பழி வாங்கும் வகையில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டிருப்பது தெரியவந்தது. துபாயில் இதற்கான சதித்திட்டம் தீட்டப்பட்டு, பின்னர் அரங்கேற்றப்பட்டது.

கடந்த 1993ம் ஆண்டு நடந்த மும்பை தொடர் குண்டுவெடிப்பு வழக்குக்கு பின்னர், மும்பையில் நடந்த 2வது மிகப்பெரிய வழக்காக இந்த வழக்கு கருதப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.


இதில் மேலும் படிக்கவும் :