பறவைக் காய்ச்சல்: கோழிகள் அழிப்பு தொடர்கிறது

Webdunia| Last Modified புதன், 4 பிப்ரவரி 2009 (12:25 IST)
மேற்கு வங்க மாநிலம் கூச்பிஹர் மாவட்டத்தில் பறவைக் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 2 கிராமங்களில் கோழிகளை அழிக்கும் பணி தொடர்ந்து நடைபெறுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த இரு கிராமங்களிலும் நேற்று 2ஆவது நாளாக சுமார் 7 ஆயிரம் கோழிகள் அழிக்கப்பட்டதாகவும், மால்டாவில் 600 கோழிகள் பறவைக்காய்ச்சலாம் உயிரிழந்ததைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

பறவைக் காய்ச்சல் பாதிப்புக்குள்ளான கிராமப் பஞ்சாயத்து பிரதிநிதிகள் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்களின் கூட்டம் நடைபெற இருப்பதாக மாவட்ட மாஜிஸ்திரேட்டு ராஜேஷ் குமார் தெரிவித்தார்.
பல பகுதிகளில் கோழிகளை அழிப்பதற்கு உள்ளூர் பகுதியினர் எதிர்ப்பு தெரிவித்ததால் இந்தக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டதாகவும் அவர் கூறினார்.

மாநில கால்நடைத் துறை அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் திடீர் சோதனை நடத்தி கோழிகளுக்கு பறவைக்காய்ச்சல் உள்ளதா என்பது பற்றி ஆய்வு செய்து வருகிறார்கள்.
ஏற்கனவே திட்டமிடப்பட்டபடி கூச்பிஹர் மாவட்டத்தில் கோழிகள் அழிப்பு இன்றுடன் முடிவடைவதாக இருந்தது. ஆனால் 45 ஆயிரம் கோழிகளை அழிப்பதற்கு கூடுதல் காலம் தேவைப்படுதால், 32 குழுக்களாக பிரிந்து அழிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


இதில் மேலும் படிக்கவும் :