தொலைபேசியில் மன்மோகன்-ஒபாமா பேச்சு!

Webdunia| Last Modified புதன், 12 நவம்பர் 2008 (12:24 IST)
அமெரிக்காவின் புதிய அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ள பராக் ஒபாமா, பிரதமர் மன்மோகன் சிங்கை இன்று தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். இந்திய-அமெரிக்க நட்புறவு மிகவும் முக்கியமானது என ஒபாமா அப்போது கூறியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று காலை மன்மோகன் சிங்கை தொடர்பு கொண்ட ஒபாமா, அனைத்து சர்வதேச பிரச்சனைகளிலும் இந்தியாவுடன் இணைந்து செயல்பட அமெரிக்க அரசு ஒத்துழைப்பு அளிக்கும் என்று கூறியுள்ளார்.

அதிபர் தேர்தலில் அபார வெற்றி பெற்றுள்ள ஒபாமாவுக்கு தனது வாழ்த்துக்களைத் தெரிவித்த பிரதமர், தற்போதைய சூழ்நிலையில் இருநாடுகளுக்கு இடையிலான நட்புறவு மிகச் சிறப்பாக உள்ளதாகவும், திருப்தியளிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும், அதிபர் ஒபாமா, தனது மனைவி, குழந்தைகளுடன் இந்தியாவுக்கு வருகை தர வேண்டும் என்றும் மன்மோகன் சிங் அவருக்கு அழைப்பு விடுத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற பின்னர் பாகிஸ்தான் உட்பட 15 நாடுகளைச் சேர்ந்த தலைவர்களை தொலைபேசியில் அழைத்து ஒபாமா பேசினார். எனினும், பிரதமர் மன்மோகன் சிங்கை அவர் தொடர்பு கொள்ளாமல் புறக்கணித்து விட்டதாக செய்திகள் வெளியானது.
கத்தார், ஓமன் நாடுகளுக்கு மேற்கொண்ட் 3 நாள் சுற்றுப்பயணத்தை வெற்றிகரமாக முடித்துவிட்டு நேற்று முன்தினம் இரவு நாடு திரும்பிய பிரதமர் இந்த செய்திகளை மறுத்ததுடன், தாம் சுற்றுப்பயணத்தில் இருந்ததால் ஒபாமாவால் தன்னைத் தொடர்பு கொள்ள முடியவில்லை என்று விளக்கியது குறிப்பிடத்தக்கது.


இதில் மேலும் படிக்கவும் :