இளம்பெண்கள் ஜீன்ஸ், டி - ஷர்ட் அணிய தடை !

Webdunia|
FILE
பீகார் மாநிலத்தில் உள்ள மக்னுபூர் கிராமத்தில் இளம்பெண்கள் ஜீன்ஸ், டி - ஷர்ட் அணிய தடை விதிக்கப்பட்டுள்ளது.

பீகார் மாநிலம் சிவான் மாவட்டத்தில் உள்ள மக்னுபூர் என்னும் கிராமம் உள்ளது. சில நாட்களுக்கு முன்பு இந்த கிராமத்திலிருந்து 3 இளம் பெண்கள் திடீரென மாயமாகி விட்டனர். அவர்களுக்கு என்ன நேர்ந்தது, தற்போது அவர்களின் நிலை என்ன என்பது தெரியவில்லை.

மாயமான 3 இளம்பெண்களின் நிலையை குறித்து கிராம மக்கள் விவாதித்தபோது, மூன்று பெண்களும் எப்போதும் ஜீன்ஸ், டி - ஷர்ட் அணிந்து, அதிக நேரம் செல்போனில் பேசிகொண்டிருந்தது தெரியவந்தது.
இதையடுத்து இனி இளம் பெண்கள் யாரும் ஜீன்ஸ், டி - ஷர்ட் உள்ளிட்ட உடைகளை அணியக்கூடாது என்று மக்னுபூர் கிராம பஞ்சாயத்தில் தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது. இதனுடன் இளம்பெண்கள் செல்போன் பேசவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

பஞ்சாயத்து முடிவை மீறி இளம்பெண்கள் ஜீன்ஸ், டி - ஷர்ட் அணிந்தாலோ அல்லது செல்போனில் பேசுவது தெரிய வந்தாலோ அவர்களுக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மக்னுபூர் கிராமத்தை சேர்ந்தவர் கூறுகையில், இளம் பெண்கள் ஜீன்ஸ், டி - ஷர்ட் போன்ற உடைகளை அணிவதும், செல்போனில் அடிக்கடி உரையாடுவதும் தான் காதலில் சிக்கிக்கொள்ள முக்கிய காரணம். இதனால் பல பெண்கள் வீட்டிலிருந்து வெளியேறி ஆதரவற்ற நிலையில் துன்பப்படுகிறார்கள்.

இவையனைத்தையும் கருத்தில் கொண்டுதான் எங்களது கிராமத்தில் இளம் பெண்கள் ஜீன்ஸ், டி - ஷர்ட் போன்ற உடைகளை அணிவதற்கும், செல்போன் உபயோகிபதற்கும் தடை விதித்துள்ளோம். இந்த தடையை அமல்படுத்த 11 பேர் கொண்ட ஒரு குழுவை நியமித்துள்ளோம் என தெரிவித்தனர்.
பீகாரில் கடந்த 3 மாதங்களில் மட்டும் சுமார் 20 கிராம பஞ்சாயத்துக்கள் இளம் பெண்கள் செல்போனில் பேச தடைவிதித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது


இதில் மேலும் படிக்கவும் :