ஆ.ராசா திகார் சிறையில் அடைப்பு; 14 நாள் நீதிமன்றக் காவல்

புதுடெல்லி| Webdunia| Last Modified வியாழன், 17 பிப்ரவரி 2011 (17:57 IST)
முன்னாள் தொலைத்தொடர்பு அமைச்சர் ஆ.ராசாவை 14 நாட்கள் நீதிமன்றக் காவலில் வைக்க சிபிஐ சிறப்பு நீதிமன்றம் இன்று உத்தரவிட்டதைத் தொடர்ந்து,அவர் டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டார்.

2ஜி ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்ட ராசாவை மத்திய புலனாய்வுக் கழகமான சிபிஐ காவலில் வைத்து விசாரிக்க சிபிஐ சிறப்பு நீதிமன்றம் அனுமதி அளித்திருந்தது.

இந்நிலையில் ராசாவின் சிபிஐ காவல் இன்றுடன் நேற்றுடன் முடிவடைந்ததை தொடர்ந்து அவர் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
அப்போது ராசாவை மேலும் காவலில் எடுக்க சிபிஐ அனுமதி கோராததால், அவரை மார்ச் 3 ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலுக்கு அனுப்ப சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஓ.பி.சைனி உத்தரவிட்டார்.

இதனையடுத்து அவர் திகார் சிறைக்கு கொண்டு செல்லப்பட்டு அடைக்கப்பட்டார்.

2ஜி ஊழலில் கைது செய்யப்பட்ட பின் ராசா சிறையில் அடைக்கப்படுவது இதுவே முதன்முறை ஆகும்.
இதுவரை அவர் டெல்லியில் உள்ள சிபிஐ தலைமை அலுவலக காவலில் அடைக்கப்பட்டிருந்தார்.

இதனிடையே திகார் சிறையில் ராசாவுக்கு புத்தகங்களும், மருந்துப் பொருட்களும், வீட்டு உணவும் வழங்க அனுமதிக்க வேண்டும் என்று அவரது வழக்கறிஞர் ரமேஷ் குப்தா தாக்கல் செய்த மனுவை நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுக்கொண்டுள்ளது


இதில் மேலும் படிக்கவும் :